திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா அண்ணாமலையார் கோயிலில் விநாயகர் உற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றம்

திருவண்ணாமலை, நவ.20: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்தையொட்டி எல்லை தெய்வ வழிபாட்டின் 3ம் நாளான நேற்று விநாயகர் உற்சவம் நடந்தது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி கொடியேற்றத்திற்கு 3 நாட்களுக்கு முன் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி முதல்நாள் துர்க்கையம்மன், 2ம்நாள் பிடாரியம்மன் பவனி நடந்தது. 3ம் நாளான நேற்று, விநாயகர் உற்சவம் நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் பவனி வந்து அருள்பாலித்தார். இந்நிலையில் தீபத்திருவிழா இன்று காலைகொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதிகாலை 5.30 மணி முதல் காலை 7 மணி வரை 3ம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

முதல் நாளான இன்று காலை 11 மணி அளவில் கோயில் 5வது பிரகாரத்தில் விநாயகர், சந்திரசேகர் பவனி நடக்கிறது. இரவு உற்சவத்தில் பஞ்சமூர்த்தி பவனி நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, வரும் 29ம்தேதி 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் சுவாமி வீதியுலாவை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. அதனால், கோயில் ஊழியர்கள் மற்றும் திருப்பணியாளர்கள் மட்டுமே இதில் பங்கேற்பார்கள்.

Related Stories:

>