×

அணைக்கட்டு அடுத்த சமத்துவபுரம் கிராமத்தில் குப்பைகளை எருவாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல் அதிகாரிகள் சமரசம்

அணைக்கட்டு, நவ.20: அணைக்கட்டு அடுத்த சமத்துவபுரம் கிராமத்தில் குப்பைகளை எருவாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அணைக்கட்டு ஒன்றியம் பொய்கை ஊராட்சி சமத்துவபுரம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஒரு சமுதாய கூடம் உள்ளது. இங்கு அப்பகுதியினர் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் அருகே பொய்கை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்கள், வார சந்தையில் சேகரிக்கப்படும் குப்பைகள், காய்கறி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.சமுதாய கூடம் அருகே குப்பைகளை எருவாக மாற்றும் திட்டம் செயல்படுத்த பிடிஓக்கள் இடம் தேர்வு செய்திருந்தனர். இதற்கு சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் விளையாட்டு மைதானம், மாட்டுத்தொழுவம், நூலகம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைகளை உரமாக்குவதற்கான கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிடிஓவிடம் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட பிடிஓ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதைத்தொடர்ந்து நேற்று அப்பகுதியில் குப்பைகளை எருவாக மாற்றும் திட்டம் தொடங்குவதற்கான பணிகள் நடந்தது.இதைப்பார்த்த அப்பகுதியினர் இப்பணியை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், அவர்கள் பொருட்படுத்தாமல் பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்டோர் திமுக முன்னாள் ஊராட்சி தலைவர் குமாரபாண்டியன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த விரிஞ்சிபுரம் எஸ்ஐ சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் சமுதாய கூடம் அருகே தொடங்கியுள்ள பணிகளை நிறுத்த வேண்டும் என்று கூறினர். இதையடுத்து போலீசார், பிடிஓக்கள் இமயவரம்பன், வின்சென்ட் ரமேஷ்பாபு ஆகியோருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர்.இதையடுத்து பிடிஓக்கள் அங்கு நடக்கும் பணிகளை தற்காலிமாக நிறுத்தி கொள்வதாக உறுதியளித்தனர். பின்னர் அங்கு நடந்து வந்த பணிகள் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : village ,dam ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...