×

புதுக்கோட்டையில் கார்த்திகை தீபதிருநாளுக்கு தயாராகும் அகல்விளக்குகள் கோயில்களில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை, நவ.20: கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு புதுக்கோட்டை குசலக்குடிபகுதியில் அகல்விளக்கு தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசு நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலை பாதுகாக்க கோயில்களில் அகல்விளக்கு தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். இந்த கார்த்திகை தீபத் திருநாளின்போது வீடுகள் மற்றும் ஆலயங்களில் அகல் விளக்குகள் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். இந்த ஆண்டு வரும் 29ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் அகல்விளக்கு தயாரிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை குசலக்குடி பகுதியில் ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் கார்த்திகை தீப விளக்கு தயாரிக்கும் பணி இரவு, பகலாக செய்து வருகின்றனர். ஐந்து முக விளக்கு, தாமரை விளக்கு, லட்சுமி மோட்ச விளக்கு என பல வடிவங்களில் அகல்விளக்குகளை தயாரித்து வருகின்றனா்.இதுகுறித்து அகல் விளக்கு தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது: நாங்கள் சிறுவயதில் மண்பாண்டத் தொழிலை கற்றுக்கொண்டு தற்போது குடும்பத்தினருடன் சேர்ந்து மண்பாண்டத் தொழில் செய்து வருகிறோம். ஒரு நாளைக்கு 1000க்கணக்கான கார்த்திகை சட்டி செய்து விடுவோம். தற்போது மழை பெய்து வருவதால் விளக்குகள் தயாரிக்கும் பணி தாமதித்து விட்டது. 1000ம் கார்த்திகை சட்டி கொண்ட மூட்டை ரூ.550, ரூபாய் 600க்கு வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர். நாங்கள் செய்த கார்த்திகை சட்டியினை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வந்தோம்.

ஆனால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு அகல் விளக்குகளின் விற்பனையும், உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது. இத்தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் போதிய லாபம் இல்லாத காரணத்தினால் மாற்றுத் தொழிலை தேடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலை பாதுகாக்க கோயில்களில் அகல் விளக்கு தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். வங்கிக்கடன்கள் வழங்கி புதுப்புது வடிவங்களில் அகல் விளக்கு உள்ளிட்ட மண்பாண்டங்கள் பொருட்கள் தயாரிக்கும் நவீன இயந்திரங்களை வழங்கி இத்தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : temples ,Pudukottai ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு