×

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

நாகர்கோவில், நவ.20: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் பலத்த மழை பெய்துவருகிறது. வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்துள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை வரை ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மயிலாடியில் 43.4 மி.மீ மழை பெய்திருந்தது.நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.90 அடியாக இருந்தது. அணைக்கு 965 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 428 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 70.05 அடியாக இருந்தது. அணைக்கு 675 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

சிற்றார்-1ல் 15.15 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 200 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொய்கையில் 18.90 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 21 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 41.34 அடியாகும். அணையில் இருந்து 30 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44 அடியை மீண்டும் எட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அணையில் நீர்மட்டம் 45 அடியை கடக்கும் தருவாயில் அணையில் இருந்து மறுகால் வழியாகவும் தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழையளவு (மி.மீ)
சிற்றார்-1    : 12
கன்னிமார்    : 14.8
கொட்டாரம்    : 19.2
மயிலாடி    : 43.4
நாகர்கோவில்    : 9.8
பெருஞ்சாணி    : 10.4
புத்தன் அணை    : 9.8
பாலமோர்    : 8.4
ஆரல்வாய்மொழி    : 16
குருந்தன்கோடு    : 7.4

Tags : Water level rise ,district ,Kumari ,
× RELATED குமரி மாவட்டம் முள்ளூர்துறையில் ரூ.5...