×

சிபிசிஐடி போலீசார் விசாரணை காசியிடம் சிக்கிய டாக்டர்கள், பேராசிரியைபல பெண்கள் புகார் கொடுக்க முடிவு

நாகர்கோவில்:   சமூக வலை தளங்களில் இளம்பெண்களுடன் பழகி அவர்களை காதலிப்பது போல் நடித்து பலாத்காரம் செய்ததுடன், ஆபாச வீடியோக்கள் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதாகி உள்ள, நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி (27) மீது ஏற்கனவே 6 புகார்கள் பதிவாகியுள்ளது.  சமீபத்தில் மேலும் ஒரு இளம்பெண் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் காசி மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து, அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.  காசியின் லேப் டாப்பில் அழிக்கப்பட்ட வீடியோக்கள், போட்டோக்களை   சைபர் க்ரைம் சிறப்பு குழு மீட்டனர்.

 அதில் போலீசார் மலைத்து போகும் அளவுக்கு  1000த்துக்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்தன. அதில் உள்ளவர்களின் அடையாளங்களை கண்டுபிடிப்பது தொடர்பாக காசியிடம் விசாரணை நடந்தது. விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளது.  காசியின் செல்போன் சிம்கார்டு, போன் மெம்மரி, கூகுள் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் 17 ஆயிரம் எண்கள் இருந்துள்ளன. இதில் பல எண்கள் அழிக்கப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட போன் எண்களை எடுக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். மேலும் காசியின் தொடர்பில் இருந்த செல்போன் எண்களில் போலீசார் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். காசியிடம் பெங்களூர், மும்பை, நெல்லை, கடலூர், சென்னை மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த பல பெண்கள் சிக்கியுள்ளனர். இதில் சென்னை, மும்பை, குமரி மாவட்டத்தை சேர்ந்த பல பெண் டாக்டர்கள், மருத்துவ மாணவிகளும் அடங்குவர். மேலும் சென்னையை சேர்ந்த ஒரு பேராசிரியையும் இவரிடம் மாட்டியுள்ளார்.

 பெரும்பாலான ஆபாச படங்கள் காசியும், பாதிக்கப்பட்ட பெண்களும் சேர்ந்து இருப்பதுபோல் இல்லாமல், காசியின் வற்புறுத்தலுக்கு இணங்க, அவர்கள் தங்களது உடல் அழகை வீடியோவாக எடுத்து, காசிக்கு அனுப்பியுள்ளனர். இதனை அவன் பதிவிறக்கம் செய்து, அந்த வீடியோவை வைத்து அந்த பெண்களை சீரழித்து, பணம் பறித்துள்ளான். பெண்களை பலாத்காரம் செய்யும் வீடியோக்கள் எல்லாம் பெரும்பாலும் காரில் வைத்தே காசி எடுத்துள்ளான். காசியின் தொடர்பில் இருந்த பெண்களை போலீசார் தொடர்பு கொண்டு புகார் கொடுக்குமாறு கூறியுள்ளனர். இதில் பெரும்பாலான பெண்கள், தாங்கள் திருமணம் ஆகி குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.

தகவல் வெளியே கசிந்தால், வாழ்க்கை சீரழித்துவிடும் என பயந்து புகார் கொடுக்க விரும்பவில்லை என போலீசாரிடம் கதறியுள்ளனர்.  ஒரு சில பெண்கள் புகார் கொடுக்க தயாராகியுள்ளனர். இதனால் காசிக்கு எதிராக மேலும் புகார்கள் வரவாய்ப்புள்ளது. ஆதாரங்கள் இருந்து சம்பந்தப்பட்ட இளம்பெண்கள் புகார்கள் அளிக்க வேண்டும். புகார் அளிப்பவர்களின் விவரம் மிகவும் ரகசியமாக வைக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் கூறி உள்ளனர்.

Tags : doctors ,CPCIT ,professors ,women ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை