×

காதலனுக்கு நிச்சயம் செய்த பெண்ணின் வீட்டு முன் காதலி தீக்குளிக்க முயற்சி காதலனை நம்பி கணவரை பிரிந்தவர்

நெல்லிக்குப்பம், நவ. 13:  காதலனுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணின் வீட்டு முன் காதலி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மஞ்சக்குப்பம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் செல்லம்மாள் (27). இவர் கல்லூரியில் படிக்கும் போது கடலூர் வில்வநகரை சேர்ந்த பாபு மகன் பிரதீப் (30) என்பவரை காதலித்து வந்தார். இவர் விசிக மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளராக இருந்தார். சில மாதங்களாக பிரதீப் தலைமறைவாகி விட்ட நிலையில், செல்லம்மாள் எம் புதூர் பகுதியை சேர்ந்த ஜான்பாண்டியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உஜா (3) என்ற பெண் குழந்தை உள்ளது.  இந்நிலையில் மீண்டும் செல்லம்மாளை சந்தித்த பிரதீப், உனது கணவரை விவாகரத்து செய்து விட்டு வந்தால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியதன் பேரில், செல்லம்மாள் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனியாக வீடு எடுத்து பிரதீப்புடன் 3 மாதமாக வாழ்ந்து வந்தார்.

 இதனிடையே செல்லம்மாளுக்கு தெரியாமல் பிரதீப் மருதாடு பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய பேசி கொண்டிருந்தார். இதனை அறிந்த செல்லம்மாள் கடலூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதற்கு சரியான பதில் கிடைக்காததால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். பின்னர் எஸ். குமராபுரம் பஞ்சாயத்து தலைவரிடம் மனு கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதீப்புக்கும் மருதாடு பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதனை அறிந்த செல்லம்மாள் நேற்று மதியம் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று, பிரதீப் என்னை ஏமாற்றி எனது வாழ்க்கையை கெடுத்து விட்டார். அவருக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைக்க கூடாது என கூறியுள்ளார். பின்னர், உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் தடுத்து நிறுத்தினர்.

ஆனால் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் என கூறி அந்த பெண்ணின் வீட்டு வாசலில் தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர், தங்கள் மகளை பிரதீப்புக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டோம் என தெரிவித்தனர். இதனால் செல்லம்மாள் அங்கிருந்து சென்றார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : house ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...