×

தஞ்சையில் மாற்று உடையில் தீவிர கண்காணிப்பு ரயிலில் வெடி கொண்டு செல்வதை தடுக்க போலீசார் அதிரடி சோதனை

தஞ்சை, நவ.13: ரயிலில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க தஞ்சை ரயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ரயிலில் தீ விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பட்டாசு , பெட்ரோல் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்கள் கொண்டு செல்ல நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு ரயிலில் செல்பவர்கள் யாராவது பட்டாசு வாங்கி கொண்டு செல்கிறார்களா? என்பதை கண்காணிக்க தஞ்சை ரயில் நிலையத்தில் இருப்பு பாதை போலீசார் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி நேற்று தஞ்சை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்வேலன், ராமநாதன், ஏட்டு அருணாச்சலம், தனிப் பிரிவு தலைமை காவலர் சுரேஷ் மற்றும் போலீசார் ரயில் நிலைய நுழைவு வாயிலில் நின்று பயணிகளிடம் சோதனை நடத்தினர். பின்னர் மெட்டல் டிடெக்டர் மற்றும் நவீன கருவி மூலம் அவர்களது உடைமைகளை பரிசோதித்தனர். அதில் வெடிபொருட்கள் இல்லை என்றால் மட்டுமே அவர்களை ரயில் நிலையத்துக்குள் அனுமதித்தனர். அப்போது ஒரு பயணி கொண்டுவந்த பையில் பட்டாசு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டு அவரை வழியனுப்ப வந்த உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அந்த பயணி எச்சரிக்கை செய்யப்பட்டார். இதேபோல் தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்து நின்ற அனைத்து ரயில்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறும்போது: தீபாவளியை முன்னிட்டு ஏற்படும் பயணிகள் நெரிசலைப் பயன்படுத்தி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் தஞ்சை ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாற்று உடையிலும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ரயில்களில் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள்கள், பட்டாசுகள் கொண்டு செல்வதை தடுக்க சோதனை நடத்தி வருகிறோம். ஓடும் ரயிலில் யாராவது பட்டாசு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags : Thanjavur ,
× RELATED வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி...