×

தொழிலாளி குடும்பத்திற்கு அரசின் காப்பீட்டு தொகை பயிர் காப்பீடு அலுவலகம்

தஞ்சை, நவ.13: தஞ்சை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ.வேலுமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் ஆம்பலாப்பட்டு பாசனதாரர் சங்க தலைவர் தங்கவேல் பேசும்போது, ஒரத்தநாடு வட்டம் ஆம்பலாப்பட்டு தெற்கு ஊராட்சி கீழக்கோட்டைத் தெருவில் பல ஆண்டுகளாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பக்கத்து கிராமங்களுக்கு நெல்லை எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இச்சுற்றுப் பகுதிகளுக்கு இந்த நெல் கொள்முதல் நிலையம் மைய பகுதியாக இருந்தது. எனவே மீண்டும் இங்கு நேரடி நெல் கொள்முதல் அமைக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் பேசும்போது, பூதலூர் தாலுகா இந்தலூர் ஊராட்சி கடையக்குடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இங்கு அய்யனார், குருக்கள் ஏரி என 2 ஏரிகள் உள்ளது. இது பட்டுக்கோட்டை அக்னியாறு வடிகால் கோட்டம் பராமரிப்பில் உள்ளது. இதுவரை காட்டுவாரி வழியாக மானாவாரி பாசனமாக உள்ளது. இதன் மூலம் சுமார் 250 ஏக்கர் நஞ்சை நிலம் பாசனம் பெறுகிறது. மழை இல்லாத காலங்களில தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்போது திருச்சி ஆற்றுப்பாசன கோட்ட பராமரிப்பில் உள்ள உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலிருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. எனவே தொடர்ச்சியாக பாசன வசதி பெற 2 ஏரிகளையும் ஆயக்கட்டில் இணைத்து உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலிலிருந்து தொடர்ச்சியாக தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும் என்றார்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்க மாவட்ட அவைத் தலைவர் ரவிச்சந்தர் பேசும்போது, ஒவ்வொரு ஆண்டும் பல வருவாய் கிராமங்கள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விடுபடுவதும், இழப்பீட்டு தொகை பெற்ற கிராமங்களிலேயே பல விவசாயிகளுக்கு கிடைக்காமல் போவதும் தொடர்ந்து நடக்கிறது. எனவே இக்குறைபாடுகளை களைய பயிர் காப்பீட்டு அலுவலகத்தை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே செயல்படும் விதமாக அமைத்து தர வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு தொகைகளை கணக்கிட மேற்கொள்ளப்படும் மாதிரி அறுவடை பணியில் வேளாண் அதிகாரி, காப்பீட்டு நிறுவன ஊழியர், மாதிரி அறுவடை நடைபெறும் நிலத்தின் உரிமையாளர் மட்டுமே பங்கேற்கின்றனர். பயிர்காப்பீட்டில் நடைபெறும் குழப்பங்களை தெளிவுப்படுத்த மாதிரி அறுவடையின்போது அந்த கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து வெளிப்படையாக மாதிரி அறுவடை நடைபெற வேண்டும் என்றார்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...