×

விடிந்தால் தீபாவளி பண்டிகை புதுகை பஜாரில் மக்கள் கூட்டம் குறைவு


புதுக்கோட்டை, நவ.13: தீபாவளிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில் புதுக்கோட்டையில் மக்கள் கூட்டம் பெரிய அளவில் இல்லை. இதனால் அனைத்து வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறவில்லை என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜவுளி, மளிகை, பட்டாசு விற்பனை சூடுபிடிக்கும். தீபாவளி நேரத்தில் புதுக்கோட்டை நகரின் சாலையோரங்களில் துணி வியாபாரமும் தொடங்கி விடும். வழக்கமாக, ஆயுத பூஜை முடிந்ததும் ஜவுளிக்கடைகளில் விற்பனை களைகட்டும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் ஜவுளிக்கடைகள் பேன்சி ஸ்டோர் மளிகை கடைகள் என வியாபாரம் ‘டல்’ அடித்து வருகிறது. கீழ ராஜவீதி, மேல ராஜவீதி உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளிலும் பெரிய அளவில் கூட்டம் இல்லை.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலுக்கு வந்து வியாபார நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டன. தொழில்கள் முடங்கியதால் வருமானமின்றி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது என்றாலும் கூலித் தொழிலாளர்கள் ஏழை எளிய மக்கள் பணமின்றி தீபாவளிக்கு பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்காக பட்டாசு கடைகளுக்கான அனுமதி சமீபத்தில் தான் வழங்கப்பட்டு கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் வியாபாரம் பெரிய அளவில் இல்லை.

தீபாவளி பண்டிகையை புத்தாடை இனிப்பு என சிறப்பாக கொண்டாட வேண்டிய மாவட்ட மக்கள் பண்டிகை கடந்தால் போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதே போல் புதுக்கோட்டை கடைவீதியில் தீபாவளி பண்டிகையின்போது ஒரு வாரத்திற்கும் முன்பிருந்தே நகரின் நான்கு வீதிகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும். இந்த ஆண்டு கொரோனா அச்சம் ஒரு பக்கம் என்றாலும் மக்களிடம் பணம் இல்லாததால் கடைவீதியில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. கொரோனா தாக்கம் காரணமாக மக்களிடம் கையில் பணமின்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபாவளி வியாபாரம் ‘டல்’ அடித்துள்ள நிலையில் வியாபாரிகளை கவலையடைய செய்துள்ளது.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபாவளி என்றால் ஐந்து நாட்கள் முன்பே பொதுமக்கள் கூடுவார்கள். இதனால் வியாபாரம் அதிக அளவில் இருக்கும். இந்த ஆண்டு கொரோனா காலத்தால் நாளை தீபாவளி இருந்தும் கூட்டம் கூடவில்லை. தற்போது மக்கள் ஜவுளிகடைகள், நகை கடைகளில் ஓரளவிற்கு செல்கின்றனர். மற்ற இடங்களில் பெரிய அளவில் கூடவில்லை. கடந்த ஆண்டு கீழ ராஜவீதியில் மக்கள் கூட்டம் ஒதுங்க இடம் இன்றி காணப்பட்டது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை காட்டிலும் குறைவுதான். இதனால் வியாபாரம் குறையும். இன்று கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

Tags : Diwali ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...