×

இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த தமிழர்களின் படகுகளுக்கு இழப்பீடு தொகை தர வேண்டும் மத்திய அரசுக்கு தேசிய மீனவர் பேரவை கோரிக்கை

நாகை,நவ.13: இலங்கை நீதிமன்ற உத்தரவின்படி உடைக்கப்படவுள்ள தமிழர்களின் 121 படகுகளுக்கு இழப்பீட்டு தொகையை தர வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவை துணை தலைவர் குமரவேலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை கடற்படை அத்துமீறி தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 600க்கும் மேற்பட்ட மீனவர்களை கொலை செய்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களை பிடித்து சென்று இலங்கை சிறையில் அடைத்தனர். அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒவ்வொரு மீன்பிடி படகும் ரூ.40 முதல் 90 லட்சம் ஆகும். தமிழக மீனவர்கள் கடன் வாங்கி அதற்காக இன்றும் வட்டி கட்டி வருகின்றனர். படகுகள் தான் மீனவர்களின் வாழ்வாதாரம்.

இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை தடுக்குமாறு கோரி மீனவ மக்கள் பல்வேறு போராட்டங்களையும், கோரிக்கைகளையும் கடந்த 1983ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்தும் பயன் இல்லை. இப்போது 121 படகுகளை உடைத்து நொறுக்க இலங்கை நீதிமன்றம் உள்ளதாக தெரிகிறது. எனவே இந்த பிரச்னையில் இருதரப்பு அரசுகளும் தலையிட்டு படகுகளை மீட்டுத் தர வேண்டும். அல்லது இழப்பு ஈட்டுத்தொகை பெற்றுத்தர வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் மற்றும் மணப்பாடு கிராமங்களின் அருகில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பகுதியானது அதிக அடர்த்தி உள்ளது. இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதால் ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக கடல்வளம், விவசாய வளம் பாதிக்கப்படும். உடல் ரீதியான பிரச்சனைக்கும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளாவார்கள். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும். அதே போல் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தால் ஏற்படும் உயிர் இறப்புகளையும், பாதிப்புகளையும் கவனத்தில் கொண்டு அதற்கான இழப்பீடுகளை வழங்க வேண்டும். துறைமுகத்தை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : National Fishermen's Council ,Tamil ,Central Government ,Sri Lankan Navy ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...