×

மாட்டு கொட்டகையான சாம்ராஜ் வீதி சுகாதாரக்கேட்டால் பொதுமக்களுக்கு நோய் பரவ வாய்ப்பு

தேனி. நவ. 13: தேனி பெத்தாட்சி கோயில் எதிரே ரயில்வே ரோட்டில் சுகாதாரக்கேடு அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேனி நகர் பெரியகுளம் சாலையில் பெத்தாட்சி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு எதிர்ப்புறம் சாம்ராஜ் வீதி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சாம்ராஜ் வீதிக்கு அருகே போடி- மதுரை இடையிலான ரயில் பாதைக்கான தண்டவாள பகுதி உள்ளது. தற்போது போடி- மதுரை ரயில் பாதை திட்டப்பணி நடந்து வருகிறது. இதனால் தண்டவாளம் அமைய உள்ள பகுதி காலிமைதானம் போல உள்ளது.

இதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தங்கள் வீட்டில் வளர்க்கும் மாடுகளை இப்பகுதியில் கொண்டு வந்து கட்டி வைத்துள்ளனர். மேலும் மாடுகளை குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் வந்து கட்டி வைக்கும் நிலையும் உள்ளது. இதன் காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்து இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் கொசுக்கடியால் அவதியுறும் நிலை உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் மாடுகள் கட்டுவதாலும், மாட்டு சாணங்களை குவித்து வருவதாலும் கொசு உற்பத்தி அதிகரித்து மழைக்கால நோய்கள் இப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு பரவி விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் சுகாதார கேட்டை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Samraj Road ,public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...