×

வெளிமாவட்ட தொழிலாளர்கள் 80 சதவீதம் பேர் சொந்த ஊர் பயணம்

திருப்பூர்,நவ.13: நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில்,  திருப்பூரில் இருந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள்  80 சதவீதம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். திருப்பூரில் பின்னலாடை தொழில்கள், உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகிறது. இந்த தொழில்களில் பணியாற்ற வெளி மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிக்கைக்கு எந்த ஊர்களில் இருந்தாலும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கம்.  

அதன் படி போனஸ் வாங்கிய பின் தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கள் குடும்பங்களுக்கு தேவையான துணிகளை வாங்கி கொண்டு 80 சதவீதம் பேர் பஸ், கார் மூலம் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பூர் மாநகரில் உள்ள பல்லாயிரக்கணக்கான பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு போனஸ் விநியோகிக்கப்பட்டு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று முதல் செல்லத் தொடங்கினர். இதனால் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காலை முதலே காணப்பட்டது.

இதனால் வீதிகளில் வாகனங்கள் மெள்ள மெள்ள நகர்ந்தன. தொடர்ந்து பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருந்ததால், நேற்றிரவு வரை இதே நிலை தொடர்ந்தது. திருப்பூர் சாலையோர வியாபாரி ஜெயபால் கூறியதாவது: மாநகரில் கடந்த இரண்டு நாட்களாக கூட்டம் உள்ளது. ஆனால் வழக்கமான தீபாவளி வியாபாரம் இல்லை. தொழில் மந்த நிலையிலேயே உள்ளது. கொரோனா ஊரடங்கால் மக்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் தேவையான அளவு வாங்குகிறார்கள். கொரோனா தொற்றால் வேலை இழப்பு, சம்பள குறைப்பு நடவடிக்கைகளில் நிறுவனங்கள் இறங்கியதால், வழக்கமான தீபாவளி விற்பனை இல்லை. வழக்கத்தைக் காட்டிலும் 35 முதல் 40 சதவீதம் வியாபாரம் குறைவு தான் என்றார்.

Tags : home ,
× RELATED சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சுவாமி...