கூடலூர் ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

கூடலூர், நவ.13: கூடலூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடலூர் ரேஷன் கடைகளில் அரிசியை தவிர கோதுமை, சர்க்கரை, பருப்பு, உளுந்து, மண்ணெண்ணெய் , எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் முழுமையாக கிடைப்பதில்லை. 1ம் தேதி 10ம் தேதிக்குள் பொருட்கள் வாங்குபவர்களுக்கு இவை கிடைத்தாலும் அதிலும் முழுமையாக சில பொருட்கள் கிடைப்பதில்லை. இதற்காக ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து அலைய வேண்டி உள்ளது. குறிப்பாக, ரேஷன் கார்டுகளுக்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.

ஆனால், அரிசி உள்ளிட்ட பொருட்களை ஒன்றாக வாங்கி செல்பவர்களுக்கு சில நேரங்களில் மண்ணெண்ணெய் வேறு ஒரு நாளில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஒரு லிட்டர் மண்ணெண்ணெயை பெறுவதற்காக பொதுமக்கள் மீண்டும் ரேஷன் கடைக்கு வர வேண்டும் என்றால் அதற்காக ஒரு நாள் முழுவதும் வீணாகிறது. மேலும், தொலை தூரங்களில் உள்ளவர்கள் இதற்காக ரூ.50 முதல் ரூ.200 வரை வாடகை வாகனங்களுக்கு செலவு செய்ய வேண்டி உள்ளது. இதைத்தடுக்க ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் மண்ணெண்ணெய் உள்பட அனைத்து பொருட்களும் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>