×

ஓகி புயலில் சேதமடைந்த 40 மின்கம்பங்களை சீரமைக்க நிதி வசதி இல்லை

நாகர்கோவில், நவ.12: ஓகி புயலில் சேதமடைந்த 40 மின்கம்பங்களை சீரமைக்க நிதி வசதி இல்லை என்று கூறி தெள்ளாந்தி ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.  தெள்ளாந்தி ஊராட்சி தலைவர் கவிதா ரஜினிகாந்த், துணை தலைவர் எஸ்தர் ராணி, வார்டு உறுப்பினர்கள் சுதா, தங்கத்துரை, வித்யா, மணிகண்டன், சுபா நந்தினி ஆகியோர் நேற்று கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தெள்ளாந்தி ஊராட்சியில் கடந்த 2017ம் ஆண்டில் ஏற்பட்ட ஓகி புயல் இயற்கை பேரிடரின்போது மண்ணடி பகுதியில் 40 மின்கம்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகி தெருவிளக்குகள் சேதமடைந்தது. இதனால் ஆதி திராவிடர் கிராமமான இந்த பகுதியும், தெள்ளாந்தி காலனியில் முடங்கன்விளை, கலைஞர் நகர் பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

மக்களுக்கு அடிப்படை வசதியான தெருவிளக்கு வசதியை ஏற்படுத்த ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பூதப்பாண்டி மின்வாரியத்திற்கு மனு கோரியதின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள R2.52 லட்சம் செலுத்த அறிவுறுத்தி டிமாண்ட் தரப்பட்டுள்ளது. இந்த தொகையை செலுத்த ஊராட்சியில் போதிய நிதி வசதி இல்லை. ஆனால் ஊராட்சி கணக்கு எண் 2ல் ஆறு மாத காலத்திற்கு மின்சாரம் கட்டணம் கட்ட போதுமான அளவு நிதி உள்ளது. தற்போது வரை மின் கட்டணம் நிலுவை ஏதும் இல்லை. எனவே இந்த தொகையை கணக்கு எண் 2ல் இருந்து செலுத்த அனுமதிக்க வேண்டும் அல்லது மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

இந்த பணிகள் அனைத்தும் ஊராட்சியில் மிகவும் அவசியமும், அவசரமும் ஆகும். இந்த பணிகள் முடிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் நடக்காததால் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடும் முன்னர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : facility ,storm ,Oki ,
× RELATED பிரதமர் வீட்டு வசதி திட்ட முறைகேடு: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை