×

மக்கள் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை முதல்வர் வருகையால் குமரி மக்களுக்கு எந்த பலனும் இல்லை

நாகர்கோவில், நவ. 12: ஆஸ்டின்  எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  ஆய்வுப்பணி மற்றும் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்க குமரி மாவட்டம்  வருகை தந்தார். அவர் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவார்,  புதிய அறிவிப்புகளை வழங்குவார், பல திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு  அர்ப்பணிப்பார் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால்  முதல்வர் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவிக்கவோ, தொடங்கி  வைக்கவோ இல்லை. முதல்வர் முதல்முறை (22.9.2020) குமரி மாவட்டம்  வருகை தருவதாக அறிவித்தபோதே, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  பகுதியில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள், நிலுவையில் உள்ள பணிகள்,  மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க வேண்டியவை உட்பட 95 திட்ட பணிகளை  செப்டம்பர் 16ம் தேதி, முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவாக  அளித்திருந்தேன். ஆனால் அது தொடர்பாக எந்த பயனும் இல்லை.

மேலும் முடியும்  தருவாயில் உள்ள அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை முதல்வரின்  வருகையின்போது பொதுமக்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை  வைத்திருந்தேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை.இந்த நிலையில்  அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்ட பணியை பொதுமக்களுக்கு முதல்வர்  அர்ப்பணித்ததாக ஆளும் கட்சியினர்    ஏமாற்றி உள்ளனர். இது கண்டனத்துக்குரியது.முதல்வரை வரவேற்க காலையில்  இருந்து காத்திருந்த அவர்களது கட்சியினரே தங்களுக்கு உரிய மரியாதை  கிடைக்கவில்லை என அதிருப்தி மற்றும் ஏமாற்றத்துடன் சென்றதாக தெரிகிறது.  மொத்தத்தில் முதல்வரின் வருகை குமரி மாவட்ட மக்களுக்கு போக்குவரத்து  இடையூறை ஏற்படுத்தியதே தவிர, வேறு எந்த பயனும் விளையவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Kumari ,Chief Minister ,arrival ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...