கல்பாக்கம் அருகே பரிதாபம் கிணற்றில் மூழ்கி சகோதரிகள் பலி

சென்னை: கல்பாக்கம் அடுத்த ஆமைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் கூலித் தொழிலாளியான இவருக்கு 13 வயதில் ஒரு மகன் மற்றும் பிரியங்கா 16, செண்பகவள்ளி 11 ஆகிய மகள்கள் இருந்தனர். நத்தம் கிராமத்திலுள்ள அரசு பள்ளியில் பிரியங்கா 10ம் வகுப்பும், செண்பகவள்ளி 6ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அரிகிருஷ்ணனும், அவரது மனைவி சீதாவும் கல்பாக்கம் மற்றும் அனுபுரம் ஆகிய பகுதிகளில் நடக்கின்ற ஒப்பந்த பணிகளில் கூலி வேலைக்காக சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டிலிருந்த இரண்டு பெண் பிள்ளைகளும் காணாமல் போயிருந்தது கண்டு பல  இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை அரிகிருஷ்ணனின் வீட்டிற்கு சற்று தூரத்தில் உள்ள ஒரு வயல்வெளி கிணற்றில் இறந்தநிலையில் சிறுமிகள் உடல் மிதப்பதை கண்ட விவசாயி ஒருவர் தகவல் தெரிவித்தார். அங்கு சென்று பார்த்தபோது, இறந்து கிடப்பது பிரியங்கா, செண்பகவள்ளி என்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் அங்கு சென்று, இறந்துபோன சகோதரிகளின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கிணற்றில் குளிக்க சென்றபோது நீச்சல் தெரியாமல் தத்தளித்து இறந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>