×

சொத்து தகராறு அரிவாளால் வெட்டி காவலாளி கொலை: மைத்துனர் மகன் உள்ளிட்ட 2 பேர் கைது

திருப்போரூர்: கேளம்பாக்கம் அடுத்த தையூர் கோமான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் (55). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மனைப்பிரிவு ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மரகதம் என்ற மனைவியும், இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். மரகதத்தின் தம்பி கோவிந்தசாமி என்பவரது குடும்பத்திற்கும் சாமுவேல் குடும்பத்திற்கும் பூர்வீக சொத்து பாகப்பிரிவினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு சாமுவேல் வீட்டிலிருந்து தான் வேலை பார்த்து வந்த தனியார் மனைப்பிரிவுக்கு வந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த இருவர் அவரை பின்பக்கமாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இராஜாங்கம் தலைமையில் போலீசார் அங்கு வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த சாமுவேலின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்ட சாமுவேலின் மைத்துனர் கோவிந்த சாமியின் மகன் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கேளம்பாக்கம் போலீசார் இந்த கொலை சம்பவத்தில் முக்கியமாக செயல்பட்ட விமல்ராஜ் (18) மற்றும் அவனது நண்பர் சகாயராஜ் (19) என்பவனையும் நேற்று கைது செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் கொலை செய்யப்பட்ட சாமுவேலின் மனைவி மரகதம் மற்றும் அவரது சகோதரிகள் இருவரும் சேர்ந்து பூர்வீக சொத்தை விற்பனை செய்து விட்டனர.  

தனது தந்தை கோவிந்தசாமியின் பாகத்தை கொடுக்கவில்லை என்றும், இதை முன்னின்று செய்த சாமுவேலிடம் இது குறித்து கேட்டபோது வேறு இடத்தில் சொத்து கொடுத்து விட்டதால் விற்பனை செய்யும் நிலத்தில் பங்கு தர முடியாது என்று கூறி அசிங்கப்படுத்தியுள்ளார். இதனால் கடந்த 5 வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லாமல் விரோதத்தை வளர்த்து வந்ததாகவும், தனது தந்தையை ஏமாற்றிய மாமாவை கொலை செய்வது என முடிவு செய்து நண்பனுடன் சேர்ந்து கொன்றதாகவும் கோவிந்தசாமியின் மகன் விமல்ராஜ் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து 2 அரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Tags : Policeman ,nephew ,
× RELATED பாஜக எம்எல்ஏவின் மருமகன்.. ஈரோடு...