×

வைகையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் முறைபாசனம் அமல்படுத்த முடிவு

ஆண்டிபட்டி, நவ. 12:  0ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களுக்கு முதல்போகம் மற்றும் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை தேனி மாவட்டத்தில் இதுவரை போதிய அளவு பெய்யவில்லை. போதிய மழை இல்லாத காரணத்தினால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து கொண்டே வந்தது.

மேலும் முல்லை பெரியாறு அணையில் இருந்து குறைவான தண்ணீர் வந்து கொண்டிருந்ததால், பாசனத்திற்க்கு திறக்கப்படும் தண்ணீரை குறைப்பது என்றும், முறைபாசன திட்டத்தின்படி விவசாயத்திற்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முறை வைத்து தண்ணீர் திறக்க முடிவ செய்யப்பட்டுள்ளது. இதனால் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது. மேலும் இன்று முதல் முறைபாசனம் அமல்படுத்தப்பட்டு குறைந்த அளவு தண்ணீர் வெளியேற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இனிவரும் நாட்களில் மழை பெய்யாத பட்சத்தில் முறை பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது தேனி,பெரியகுளம்,ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுகுடிநீர் திட்டங்களுக்கு மட்டும்  வினாடிக்கு 69 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Vaigai ,
× RELATED கடும் வெயிலால் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு