×

பருவமழை நேரத்தில் பனிப்பொழிவு குழப்பத்தில் விவசாயிகள்

சிவகங்கை, நவ. 12: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2008ம் ஆண்டிற்கு பிறகு ஆண்டு தோறும் சீரான அளவில் மழை பெய்யவில்லை. 2008 முதல் 2018ம் ஆண்டு வரை இடைப்பட்ட 9ஆண்டுகளில் அதிகபட்சமாக 2008ம் ஆண்டு 1283மி.மீ மழை பெய்ததே அதிகமான அளவாகும். 2018ம் ஆண்டு 924.4மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஆண்டுதோறும் தென் மேற்கு பருவமழை 309.6 மி.மீ, வடகிழக்கு பருவமழை 413.7மி.மீ சராசரியாக பெய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் 2017ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை 526 மி.மீ, 2018ம் ஆண்டு தென்மேற்கு பருவ மழை 306.21 மி.மீ பெய்ததே சராசரி மற்றும் அதைவிட கூடுதலாக மழை பெய்ததாகும். மற்ற ஆண்டுகளில் தென் மேற்கு பருவமழை குறைவாகவே பெய்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜுன், ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் தொடக்கம் வரை தென் மேற்கு பருவ மழை கூடுதலாக பெய்யவில்லை. அக்டோபர் பிற்பகுதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த வார தொடக்கத்தில் சில நாட்கள் மழை பெய்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக மழை முற்றிலும் நின்று பனி பெய்ய தொடங்கியுள்ளது. தினமும் மாலை முதல் அதிகாலை வரை அதிகப்படியான பனியால் இனி மழை பெய்யுமா என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை நம்பி மட்டுமே விவசாய பணிகள் தொடங்கப்படும். இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை இதுவரை சரிவர பெய்யவில்லை. தற்போதுள்ள நீர் மற்றும் நிலத்தில் உள்ள ஈரப்பதத்தில் பயிர்கள் வளர்ச்சியில் பாதிப்பிருக்காது. ஆனால் தொடர்ந்து மழை பெய்யவில்லை எனில் விளைச்சலில் பாதிப்பு ஏற்படும். பனி பெய்வதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

Tags : monsoon ,
× RELATED கடந்த 7 ஆண்டுகளாக கூடுதல் மழை பெய்தும் கண்மாய்களில் தண்ணீர் இல்லை