×

மழைக்கால நோய்களை தவிர்ப்பது எப்படி? அரசு மருத்துவர் அட்வைஸ்

பழநி, நவ. 12: மழைக்கால நோய்களை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து பழநி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் உதயகுமார் ஆலோசனை வழங்கி உள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில தினங்களாக திடீர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பழநி பகுதியில் உள்ளவர்களுக்கு திடீர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சளி போன்ற உடல்உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து பழநி அரசு மருத்துவமனையின் டாக்டர் உதயக்குமார் கூறியதாவது, மழைகாலங்களில் குடிநீரை நன்கு காய்ச்சி பிறகே குடிக்க வேண்டும். முடிந்தவரை மழையில் நனையாமல் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். சுகாதாரமான ஆடைகளை அணிய வேண்டும். சூடான உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.

எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளையே உட்கொள்ள வேண்டும். அசைவத்தை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ளலாம். அக்கி, அம்மை நோய் பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். நீர்க்காய்கறிகளான சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, கேரட், பீட்ரூட், முருங்கைக்கீரை, பொன்னாங்கன்னி, தண்டங்கீரை, பசலைக்கீரை போன்றவற்றை பயன்படுத்தலாம். கம்பு, கேழ்வரகு போன்ற முளைகட்டிய தானிய வகைகளை உட்கொள்ளலாம். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மழைகாலங்களில் கொசுக்களினால்தான் பல நோய்கள் ஏற்படுகின்றன. இதனை விரட்ட காயில்களை பயன்படுத்தினால் உடல்நலக்கேடுதான் ஏற்படும். எனவே, கொசுவை விரட்ட வேப்பிலையில் புகை ஏற்படுத்தி பயன்படுத்தலாம். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பயன்படுத்தாமல் போட்டுள்ள பொருட்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெளியே சென்று வந்தால் காலை மற்றும் மாலை என 2 வேலைகளிலும் குளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Government ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...