×

அதிகார பலம், பண பலத்தால் பீகாரில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை, நவ.12: பீகாரில் அதிகார பலம் மற்றும் பண பலத்தால் பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது என்று ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் புதுக்கோட்டையில் நேற்று அளித்த பேட்டி: 29 சட்டங்களை 4சட்டங்களாக சுருக்கி கடந்த 73 ஆண்டுகளாக இருந்துவந்த தொழிலாளர்களுக்கான உரிமையை பறித்துள்ளது மோடி அரசு. இச்சட்ட திருத்தங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வருகிற 26ம் தேதி நாடுமுழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்த இருக்கின்ற பொது வேலை நிறுத்தத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது.

பீகாரில் அதிகார பலம், பண பலத்தை பயன்படுத்தி பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. உள்குத்து வேலை செய்து ஐக்கிய ஜனதா தளத்தை பாஜக பலவீனமடைய செய்துள்ளது. லோக் ஜனசக்தி கட்சியினர் தங்களது வேட்பாளரை ஆதரித்தும், கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த செய்துள்ளதும் உள்ளடி வேலைசெய்துள்ளது பாஜக. இந்த தேர்தலில் ராஷ்டீரிய ஜனதாதளம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பதும், இடதுசாரி கட்சிகள் 16 இடங்களை வென்றிருப்பதும் முக்கியமான அம்சம்.

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இதில் ஆட்சி நிர்வாகத்திலோ, அரசியலிலோ மதத்தை கலப்பது ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொதுவாக ஆன்மீக யாத்திரையை யாரும் எதிர்ப்பதில்லை. ஆனால், பாஜக நடத்தும் வேல் யாத்திரை முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை. நீதிமன்றமும் இதை சுட்டிக்காட்டியுள்ளது. எடப்பாடி அரசோ அனுமதி மறுப்பு என்று கூறிக்கொண்டே அனுமதித்து வருகிறது. உள்ளூர் பகுதி கட்டுமானப் பணிகளுக்காகவும், மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் மாட்டுவண்டி குவாரி அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : G. Ramakrishnan ,alliance ,BJP ,Bihar ,
× RELATED பாஜவுக்கு ஜால்ரா போடும் கட்சியாக அதிமுக உள்ளது: ஜி.ராமகிருஷ்ணன் தாக்கு