×

பயன்பெற அழைப்பு உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு உதவி

அரியலூர், நவ. 12:க தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற பேரவை விதி 110ன்கீழ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் வசதி அளித்து தொழில் துவங்க இடைநிலை மூலதன உதவி, கடன் உத்தரவாதம் மற்றும் சலுகையுடன் கூடிய சுழல் நிதி வழங்கும் திட்டங்களை அறிவித்தார். மேற்படி மூன்று திட்டங்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நிதி ஆதாரம் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இச்சவால்களை எதிர்கொண்டு உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் லாபகரமானதாக இயங்க வழிவகுக்கும் வகையில் அரசு கீழ்கண்ட திட்டங்களை தகுதி வாய்ந்த வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன்பெற உருவாக்கியுள்ளது.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் துவங்கியவுடன், அந்நிறுவனங்களில் உள்ள மூலதன பங்களிப்பினை அதிகரிப்பதன் மூலம் ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் ரூ.10 லட்சம் வரை இடைநிலை மூலதன கடன் உதவித்தொகை வழங்கப்படும். இந்த தொகை மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் விளைப்பொருட்களை லாபகரமாக சந்தைப்படுத்தும் நடவடிக்களை மேற்கொள்ள இயலும். ஐந்தாண்டுகள் முடிந்த பிறகு இத்தொகையினை திருப்பி செலுத்தினால் போதுமானது. இதற்கு குறைந்த வட்டியாக 4 சதவீத வட்டி தான் ஆண்டுதோறும் செலுத்த வேண்டும். வங்கியில் கடன் பெறுவதற்கு தமிழ்நாடு அரசே வழங்கும் கடன் உத்தரவாதம் - பொதுவாக உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் கடன் வேண்டி வங்கிகளை அணுகும்போது, அடமானம் கோருவதுடன் வங்கியில் வட்டி விகிதமும் அதிகமாக இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு உற்பத்தியாளர் நிறுவனமும் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கு வங்கிகள் மற்றும் நாப்கிசான் நிறுவனத்திற்கு 50 சதவீத உத்திவாதத்தை தமிழ்நாடு அரசே வழங்கும்.

சலுகையுடன் கூடிய சுழல் நிதி - தற்போது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் போது இதர வணிக நடவடிக்கைகளுக்கு வழங்குவது போல் 12 முதல் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகதத்தினை 8 முதல் 9 சதவீதமாக குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பங்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கூடிய கடன் வழங்கப்படும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை வலுப்படுத்தி, வணிகரீதியாக வளரும் வகையில் இத்திட்டத்தினை நான்கு ஆண்டுகளில் செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ரூ.266.70 கோடி ஒப்பளிப்பு செய்துள்ளது.

இத்திட்டத்தினை செயல்படுத்திட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் நாப்கிசான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கையொப்பமிடப்பட்டது. இத்திட்டத்தினை அரசு செயல்படுத்துவதால், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடன் உத்திரவாதம் பெற்றிட நிதி நிறுவனங்களை ஊக்குவிக்கவும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மூலதன உதவி மற்றும் சலுகையுடன் கூடிய கடன் வழங்கவும் இயலும். மேலும் விவரங்களுக்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் மாவட்டத்தின் வேளாண்மை துணை இயக்குனரை (வேளாண் வணிகம்) தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Farmer Producer Groups ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் உள்ள உழவர்...