தீபாவளி கூட்டத்தை சமாளிக்க வெளி மாவட்டத்திற்கு கூடுதல் பஸ்களை இயக்க முடிவு

ஊட்டி, நவ. 12: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊட்டியில் இருந்து கோவை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் வெளி மாவட்டங்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக கூடலூர் மற்றும் பந்தலூர் போன்ற பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் அதிகளவு திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர்.  மேலும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் வெளியூர்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்கள் ஊட்டி மற்றும் கூடலூர் நோக்கி படையெடுக்க துவங்கிவிடுவார்கள். இதனால், ஊட்டி வரும் பஸ்கள் அனைத்தும் நிரம்பி வழியும். பல மணி நேரம் காத்திருந்தே பஸ்கள் ஏறி வர வேண்டிய நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகயைின் போது ஊட்டி அரசு போக்குவரத்து கழகம் நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் சென்னை போன்ற பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களை இயக்குவது வழக்கம்.

ஆனால், இம்முறை கல்லூரி மற்றும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தொழிலாளர்கள் மட்டுமே வெளியூரில் இருந்து வரவுள்ளனர். மேலும், தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளியூர்களில் பணியாற்றும் ஊழியர்களை கருத்தில் கொண்டு  நாளை முதல் கோவை, திருப்பூருக்கு வழக்கமாக செல்லும் அனைத்து பஸ்களையும் இயக்க முடிவு செய்துள்ளனர். இது தவிர, பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தால், கூடுதல் பஸ்களையும் இயக்க முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

>