×

வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் முகாம்

வால்பாறை,நவ.12: வால்பாறை பகுதியில் தொடர்ந்து வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைக்கூட்டம் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. அடர் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி எஸ்டேட் பகுதிகளில் உள்ள சிறு வனப்பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. வால்பாறை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் 11 கூட்டத்தை சேர்ந்த சுமார் 100 யானைகள் வனத்தை விட்டு வெளியேறி உள்ளது. முடீஸ் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் 70 காட்டு யானைகள் பல்வேறு கூட்டங்களாக முகாமிட்டுள்ளது. இந்நிலையில் இரசு வலசப்பாதையில் வந்த 8 யானைகள் கொண்ட  கூட்டம் ஒன்று விடியத் துவங்கியதும், முடீஸ் எஸ்டேட் தேயிலைத்தோட்ட பகுதியில் உள்ள நீர் நிலை பகுதியில் முகாமிட்டது.

எனவே அப்பகுதியில் தேயிலைத் தோட்டப்பணிகள் பாதிப்படைந்தது. தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு வர தயங்கினர். தொடர்ந்து அங்கேயே யானைகள் முகாமிடவே, வனச்சரகர் மணிகண்டன் உத்திரவின் பேரில் வனத்துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நல்லமுடி ரேஷன் கடையை காட்டு யானைகள் உடைத்து துவம்சம் செய்து, அரிசி,பருப்பை தின்றும்,வீசியும் சேதம் விளைவித்தன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காட்டு யானை அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.

Tags : elephants camp ,tea gardens ,Valparai ,
× RELATED கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது