×

காவல்கிணறு சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு இன்பதுரை எம்எல்ஏ ஏற்பாடு

பணகுடி, நவ.11: காவல்கிணறு சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்பதுரை எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  கொரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார். முன்னதாக அவர் நாகர்கோவில் செல்லும் வழியில் காவல்கிணறு சந்திப்பில் ராதாபுரம் தொகுதி மக்கள் சார்பாக இன்பதுரை எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வரை அமைச்சர் ராஜலட்சுமி வரவேற்றார். அதனைத்தொடர்ந்து ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, முதல்வருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

பின்னர் அதிமுக நிர்வாகிகள் நீண்டவரிசையில் நின்று முதல்வருக்கு தனித்தனியாக சால்வை அணிவித்து வரவேற்றனர்.  தடகள போட்டிகளில் தேசிய அளவில் சாதனை படைத்த ராதாபுரம் தொகுதியை சேர்ந்த இரு மாணவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாகனத்தின் அருகே அழைத்து மேலும் சாதனைகள் படைக்கும்படி வாழ்த்தினார். முதல்வரை பார்க்க வேண்டுமென்ற ஆசையுடன் கூட்டத்தினர் நடுவே முண்டி அடித்துக்கொண்டிருந்த மூதாட்டி ஒருவரை இன்பதுரை எம்எல்ஏ பத்திரமாக முதல்வர் அருகே அழைத்துச்சென்றார். அப்போது அந்த மூதாட்டியிடம் பரிவுடன் பேசிய முதல்வர், அந்த மூதாட்டி அணிவித்த சால்வையை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார்.  தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் புறப்பட்டு சென்றார்.

Tags : Edappadi Palanisamy ,Inbathurai MLA ,meeting ,Kavalkinara ,
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்