×

‘தீபாவளியன்று கொரோனா வந்தால் என்ன செய்வது’ பரிசோதனை செய்ய 100 நாள் திட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு: சுகாதாரத்துறை அதிகாரிகள் சமரசம்

அணைக்கட்டு, நவ.11: அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றும் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கு சென்று மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். அதன்படி, சத்தியமங்கலம் ஊராட்சி ராமாபுரம் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் கைலாசம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று முன்தினம் டெஸ்ட் எடுக்க முகாம் அமைத்தனர்.

தொடர்ந்து, நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பரிசோதனை செய்து கொள்ள வரும்படி கூறினர். இதற்கு தொழிலாளர்கள் டெஸ்ட் எடுத்தால் நான்கு நாட்கள் கழித்து தான் முடிவு வருகிறது, அதுபோல் இன்று எடுத்தால் தீபாவளி அன்று தான் முடிவு வரும். அந்த சமயத்தில் எங்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், நாங்கள் என்ன செய்வது. இதனால் பரிசோதனைக்கு வர மாட்டோம் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, மருத்துவ குழுவினர் அவ்வளவு நாட்கள் ஆகாது. அப்படியே முடிவு வந்தாலும் அதிக பாதிப்புகள் இல்லாவிட்டால் நீங்கள் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும், விரும்புபவர்களை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என எடுத்து கூறினர். இதையடுத்து தொழிலாளர்கள் பரிசோதனை செய்து கொள்ள ஒப்புக்கொண்டனர்.

அதன்படி நேற்று முன்தினம் அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், அரசு மருத்துவமனைக்கு தாமாக முன் வந்து பரிசோதனை செய்து கொண்டவர்கள், பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பரிசோதனை செய்து கொண்டவர்கள் என 175 பேருக்கு மருத்துவ குழுவினர் பிசிஆர் டெஸ்ட் எடுத்து முடிவுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : project workers ,Health officials ,Diwali ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...