கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு கொரோனா தொற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை எம்எல்ஏ மனைவிக்கு தொற்று இல்லை

கள்ளக்குறிச்சி, நவ. 11: கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு கடந்த 2 நாட்களாகவே காய்ச்சல் இருந்துள்ளது. மேலும் நேற்று முன்தினம் அதிக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரபு எம்எல்ஏ மற்றும் அவரது மனைவி சவுந்தரியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதன் முடிவுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் சவுந்தரியாவுக்கு தொற்று இல்லை என்பதும் பிரபு எம்எல்ஏவுக்கு தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரபு எம்எல்ஏ நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பிரபு எம்எல்ஏ தனது டிவிட்டர் பதிவில், கடந்த சில நாட்களாக அலுவல் காரணமாக தொகுதி நடவடிக்கைகளிலும் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வுகளிலும் தொடர்ந்து செயல்பட்டு வந்தேன். இந்நிலையில் நேற்று கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொண்டேன். அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த 2 தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். பொது வெளியில் மக்கள் தங்களது நடமாட்டத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பண்டிகை காலம் என்பதால் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். வெளியில் வரும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். வீட்டுக்கு சென்றவுடன் உங்களது உடலை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். பாதுகாப்புடன் பண்டிகையை வீட்டிலேயே கொண்டாடுங்கள். நமது பாதுகாப்பே மிக முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபு எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது கார் டிரைவர் பாலச்சந்தர், எம்எல்ஏவின் தந்தை அய்யப்பா மற்றும் எம்எல்ஏ வீட்டில் பணியாற்றி வருபவர்களான ஏழுமலை, ஆனந்த், கனகா, பாக்கியலட்சுமி, லட்சுமி ஆகிய 7 பேருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. எம்எல்ஏவின் மனைவி சவுந்தரியாவுக்கு தொற்று இல்லை என பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டாலும் சவுந்தரியா வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

Related Stories:

>