×

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

திருவாரூர், நவ.11: திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலகர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதையொட்டி திருவாருர் மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற்றது. இதில் எஸ்.பி துரை, டி.ஆர்.ஓ பொன்னம்மாள் மற்றும் அனைத்துறை அரசு அலுவலர்கன் கலந்து கொண்டனர். இதில் கலெக்டர் சாந்தா பேசியதாவது, வடகிழக்கு பருவமழை காலத்தில் மாவட்டத்தில் பாதிக்க கூடிய பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் அலுவலர்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்பகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் கொரோனா காலத்தில் தெரிவிக்கப்பட்டவாறு சமூக இடைவெளியுடன் தங்க வைப்பதற்க்கான முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும். முகாமில் உள்ளவர்களுக்கு குடிநீர், மின்சாரம், சுகாதார வசதிகள் சரியாக இருக்க வேண்டும். தங்க வைப்பவர்களுக்கு உணவு உடனே கிடைக்கும் வகையில் உணவு பொருட்களின் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும், பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டிருந்தால் அதனை சரிசெய்திட வேண்டும், மழைநீர் தேங்கும் பகுதிகளிலிருந்து நீரை உடனடியாக வெளியேற்ற மோட்டார் பம்புகளை தயார்ப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்,

சாலைகளில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்த தேவையான மரம் அறுக்கும் கை இயந்திரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும், வடிகால் பகுதிகளில் அமைந்துள்ள சிறு பாலங்களில் அடைப்பு ஏதுமின்றி சுத்தம் செய்து தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக வைத்துகொள்ள வேண்டும் என்பதுடன் அப்பகுதி தன்னார்வலர்களுக்கு போதிய பயிற்சியினை அளிக்க வேண்டும், மருத்துவமனைகளில் பாம்புகடி உட்பட்ட உயிர்காக்கும் அனைத்து தடுப்பு மருந்துகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும், கால்நடை துறையினர் கால்நடைகளுக்கு தேவையான புல் உள்ளிட்ட தீவனங்களை தேவையான பகுதிகளில் நிலுவையில் வைக்க வேண்டும் என்படன் இந்த வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருப்பதுடன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,district ,Thiruvarur ,monsoon ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...