×

கொரோனா ஊரடங்கு தளர்வு ஊட்டி அரசு அருங்காட்சியகம் திறப்பு

ஊட்டி, நவ. 11:  கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட ஊட்டி அரசு அருங்காட்சியகம் நேற்று திறக்கப்பட்டது. ஊட்டி அரசு கலை கல்லூரி அருகேயுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கல் பங்களாவில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் பழங்குடியின மக்களான கோத்தர், தோடர், குறும்பர் மற்றும் பனியர் போன்ற பழங்குடியின மக்கள் வசித்த வீடுகளின் மாதிரி மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியத்தை உணர்த்தும் அரிய வகை புகைப்படங்கள், ஓவியங்கள், பழங்காலத்து சிலைகள், பழங்கால நாணயங்கள், இசைக்கருவிகள், வன விலங்குகள், பறவைகளின் பதப்படுத்தப்பட்ட மாதிாிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஓலை சுவடிகள், பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேகாிக்கப்பட்ட 60க்கும் மேற்பட்ட கனிமங்கள், புதைப்படிவங்கள், கல்மரம் போன்றவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா தளங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்தன. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளபோதும், அரசு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அருங்காட்சியகங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 7 மாதங்களுக்கு பிறகு நேற்று ஊட்டி அரசு அருங்காட்சியம் திறக்கப்பட்டது. அரசு அறிவித்துள்ள வழிமுறைகள்படி அருங்காட்சியகத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில் கட்டங்கள் போடப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகளுக்கு வெப்பநிலை பரிசோதித்து, கிருமி நாசினிகள் கொண்டு கைகளை கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நுழைவு சீட்டு வழங்குவதற்கு பதிலாக க்யூ.ஆர்., குறியீடை ஸ்கேன் செய்தும், ஏ.டி.எம். கார்டு மூலமாகவும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முருகவேல் கூறியதாவது: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மூடப்பட்டது. அதன் பின் 7 மாதங்களுக்கு பின் இன்று (நேற்று) முதல் திறக்கப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம். கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அருங்காட்சியகத்தில் உள்ள எந்த பொருட்களையும் தொடாமல் பார்வையிடலாம், என்றார்.

Tags : Corona ,Ooty Government Museum ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...