தீபாவளியையொட்டி கூட்டம் அதிகரிப்பு கொரோனா விதிமுறை மீறும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை

பொள்ளாச்சி, நவ. 11: பொள்ளாச்சியில், தீபாவளியையொட்டி கூட்டம் அதிகரித்துள்ளதால் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, சப்-கலெக்டர் எச்சரித்துள்ளார். பொள்ளாச்சி நகரில் உள்ள வணிக வளாகம் நிறைந்த கடைவீதி, போலீஸ் ஸ்டேஷன்ரோடு, இமாம்கான்வீதி, சுப்பிரமணியசாமி கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி துணி, பட்டாசுகள்,  வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கென, நகர் மற்றும் சுற்று வட்டார கிராமப்புற பகுதிகளில் இருந்து  கடந்த சில நாட்களாக பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால், கொரோனா தொற்று பரவி வருவதால் வணிக நிறுவனங்களில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மக்கள் நடமாடுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு, சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கினார். தாசில்தார் தனிகைவேல், டி.எஸ்பி. சிவக்குமார், வியாபாரிகள் சங்கத்தினர், நகைக்கடை மற்றும் துணிக்கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சப்-கலெக்டர் கூறுகையில், பொள்ளாச்சி பகுதியில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பால் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.

சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் முகக்கவசம் அணியாமலும் பொதுமக்கள் கடை வீதிகளில் குவிவதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. கொரோனா தொற்றை  முழுமையாக கட்டுப்படுத்த, பண்டிகை காலங்களில் வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வருவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கையில், கடைக்காரர்கள் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக தனிக்குழு  அமைத்து கண்காணிப்பது, ஆய்வு மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதிமுறைகளை கடைபிடிக்காத கடைதாரர்களுக்கு அபராத நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டம் அதிகமாக இருப்பதால், நெரிசலை கட்டுப்படுத்தவும் திருட்டு உள்ளிட்ட சம்வங்களை தடுக்கவும் போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

>