×

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி ஊராட்சி அலுவலகத்தில் வாலிபர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அந்தியூர், நவ. 11:  அந்தியூரில் ஊராட்சிக்கு சொந்தமான 65 சென்ட் நிலத்தை மீட்டுத் தரக்கோரி வாலிபர்கள் 20 பேர் மைக்கேல்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 65 சென்ட் நிலம் உள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த தவசியப்பன் என்பவர் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து கரும்பு மற்றும் நிலக்கடலை சாகுபடி செய்து வந்துள்ளார்.
இந்த நிலம் மைக்கேல்பாளையம் ஊராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமானது என வருவாய்த்துறையினர் உறுதி செய்து ஆக்கிரமிப்பை அகற்ற பரிந்துரை செய்திருந்தனர்.

ஆனால் பல ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. இது குறித்து அப்பகுதி சேர்ந்த ஜெயராஜ் என்பவர் தலைமையில் வாலிபர்கள் 20 பேருடன் மைக்கேல் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நிலத்தை மீட்க கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் (தி.மு.க.) மற்றும் வருவாய் துறையினர், போலீசார் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஆக்கிரமிப்பு நிலத்தை, ஊர் பொதுமக்களுக்காக ஒரு வார காலத்திற்குள் மீட்டுத் தர வேண்டும் என வாலிபர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு அதிகாரிகள் நிலத்தை மீட்டு தருவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து வாலிபர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தை மீட்க இளைஞர்கள் போராடியது பொதுமக்களிடம் பெரும் பாராட்டை பெற்றது.  இது குறித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயராஜ் கூறியதாவது: மைக்கேல் பாளையம் ஊராட்சிக்கு சொந்தமான நிலம் என வருவாய்த்துறை சார்பில் உறுதிப்படுத்தியும், ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவிட்டும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால், இளைஞர்கள் ஒன்று சேர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம் என கூறினார்.

Tags : Youths ,panchayat office ,reclamation ,land ,
× RELATED குமாரபாளையம் அருகே கோர விபத்து பனை...