×

அருள்வாக்கு கேட்க சென்றபோது கோயில் வளாகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை

சென்னை, நவ.10: தேனாம்பேட்டை கவிஞர் பாரதிதாசன் சாலையை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி தங்கம் (36). தம்பதிக்கு சாம்குமார் என்ற மகனும், ஓவியா என்ற மகளும் உள்ளனர். தங்கத்திற்கு, கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தங்கத்துக்கு பேய் பிடித்திருப்பதாகவும் மதுராந்தகம் அடுத்த இந்தலூர் கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு அழைத்து சென்று, அருள்வாக்கு கேட்டால் சரியாகிவிடும் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த 7ம் தேதி தங்கத்தை அழைத்துக்கொண்டு இந்தலூர் கோயிலுக்கு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு தங்கத்துக்கு அருள்வாக்கு கூறியவர், ‘தொடர்ந்து கோயிலில் 21 நாட்கள் தங்கி, சிறப்பு பூஜைகள் செய்யவேண்டும். அப்படி செய்தால் நோய் குணமாகிவிடும்’’ என்று தெரிவித்துள்ளார்.

 இதனால், தங்கம், அவரது தாய் மற்றும் மாமியார் ஆகியோர் கோயில் வளாகத்தில் தங்கி, தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணிக்கு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கோயிலுக்கு ஓடிவந்தனர். அங்கு, தங்கம் உடல் முழுவதும் எரிந்த நிலையில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்ததை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தீயை அணைத்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால், அதற்குள் தங்கம் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து அச்சிறுப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, தங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ‘தங்கம் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நேற்று அதிகாலை உறவினர்கள் தூங்கிக் கொண்டு இருந்தபோது, தங்கம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கோயில் வளாகத்தில் சென்ைன பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : suicide ,temple premises ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை