×

கீழ்கருமனூர் கண்டிகையில் புதர் மண்டிக்கிடக்கும் பயணியர் நிழற்குடை

ஊத்துக்கோட்டை, நவ.10: கீழ்கருமனூர் கண்டிகை பயணியர் நிழற்குடை முன்பு மண்டிக்கிடக்கும் புதர்களை உடனடியாக  அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் கீழ் கருமனூர்கண்டிகை, கயடை ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு அரசு மற்றும்  தனியார் கம்பெனி ஊழியர்கள்  விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள்  என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் திருவள்ளூர்,  ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு  வேலை மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கு சென்னை - திருப்பதி சாலையில் உள்ள  கீழ்கருமனூர் கண்டிகை பஸ் நிறுத்தத்தில் இருந்து அங்கிருந்து பஸ் ஏரி செல்கின்றனர்.  அவ்வாறு அவர்கள் செல்வதற்கு நீண்ட நேரம் வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இதனால், அப்பகுதி மக்கள் கீழ்கருமனூர் கண்டிகை பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைத்துத்தர வேண்டும் என அரசுக்கு  கோரிக்கை வைத்தனர். அதன்படி, கடந்த 2015-2016ம் ஆண்டு ₹3 லட்சம் செலவில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு திறக்கப்பட்டது.  இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சி விட்டனர். அதன்பிறகு பஸ் நிறுத்தத்தில் நின்று தாங்கள்  செல்ல வேண்டிய ஊர்களுக்கு அப்பகுதி மக்கள் சென்று வந்தனர்.   இந்நிலையில், மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், பஸ் நிறுத்தம் பயன்பாடில்லாமல் இருந்தது. தற்போது,  அந்த பஸ் நிறுத்தம் முன்பு புதர்கள் மண்டிக்கிடக்கிறது.

இதனால், பஸ் ஏற வரும் பயணிகள் பஸ் நிறுத்தம் முன்பு உள்ள புதர்களை கண்டு பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தீண்டிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, கீழ்கருமனூர் கண்டிகை பஸ் நிறுத்தம் முன்பு உள்ள புதர்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags : Traveler ,Kizhkarumanur Kandika ,
× RELATED மணல் கடத்திய லாரி பறிமுதல்: டிரைவருக்கு வலை