×

துணை முதல்வர் தொகுதியில் கொரோனா நிவாரண நிதி வழங்கியதில் முறைகேடு கலெக்டர் அலுவலகத்தில் பளியர் இனமக்கள் புகார்

தேனி, நவ. 10: தேனி மாவ ட்டம், போடி அருகே பி.அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் சிறைக்காடு கிராமம் உள்ளது. இங்கு பளியர் இன மக்கள் 48 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான நியாய விலைக்கடை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வரை போடி புதூரில் செயல்பட்டு வந்தது. தற்போது வாகனம் மூலமாக, ரேஷன் பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா நிவாரணமாக அரசு வழங்கிய ரூ.ஆயிரம் மற்றும் இலவச அரிசியில் சிறைக்காடு கிராம மக்களுக்கு இலவச அரிசி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து பளியர் இனமக்கள் கேட்டதற்கு முறையான பதில் அளிக்காமல் அலைக்கழித்துள்ளனர். இந்நிலையில், சிறைக்கிராம மக்கள் நேற்று நியாய விலைக்கடையில் கொரோனா நிவாரணத்தொகை கேட்டதற்கு, அவர்கள் உங்களுக்கு வழங்கிவிட்டோம், நீங்கள் கையெழுத்து போட்டுள்ளீர்கள் என தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பளியர் இனமக்கள் நேற்று இரவு 7 மணிக்கு, பளியர் பழங்குடியினர் நலச்சங்க மாநில சட்ட ஆலோசகர் ராஜன் தலைமையில், தேனியில் கலெக்டர் பல்லவி பல்தேவை சந்தித்து மனு அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்துள்ளார்.

இதேபோல, போடி தாலுகாவில் சிறைக்காடு தவிர சோலையூர், மேலப்புரவு, முந்தல், சொக்கனலை, கரும்பாறை, ஊரடி, ஊத்துக்காடு, கடப்பாறை குழி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சுமார் 450க்கும் மேற்பட்ட பளியர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் கொரோனா நிதி உதவி வழங்கப்பட்டதா என்பதை மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்திட வேண்டும் என பளியர் பழங்குடியின மக்கள் நல சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். துணை முதல்வர் தொகுதியில் கொரோனா நிவாரண நிதி ரூ.1000 வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Tags : races ,Paliar ,Office ,Collector ,Deputy Chief Minister ,constituency ,
× RELATED ஆரணி வட்டார போக்குவரத்து...