×

ஊரணியும் வறண்டதால் குடிநீரின்றி அல்லல்படும் வெட்டுக்குளம் மக்கள் தடையின்றி வழங்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், நவ.10: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வெட்டுக்குளம் கிராமத்தில் குடி தண்ணீரின்றி கிராமத்தினர் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தட்டுபாடின்றி குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே சித்தூர்வாடி வெட்டுக்குளம் கிராமத்தில் 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பல ஆண்டுகளாக காவிரி கூட்டு குடிநீர் முறையாக சப்ளை இல்லை. இதனால் ஊரின் மையப்பகுதியில் உள்ள கோவில் ஊரணியில் மழைநீரை தேக்கி, அந்த நீரை தேத்தாங்கொட்டையை பயன்படுத்தி குடிநீராக மாற்றி பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், பருவமழை ஏமாற்றம் காரணமாக ஊரணியில் நீர் இன்றி வறண்ட நிலையில் உள்ளதால், அப்பகுதியினர் குடிநீருக்கு கடும் அவதியடைந்து வருகின்றனர். வறண்ட ஊரணியில் கிணறு ஊற்று தோண்டி இரவு முழுவதும் காத்திருந்து குடிநீர் சேகரிக்கும் பரிதாப நிலையில் அப்பகுதியினர் உள்ளனர். மேலும் பாதுகாப்பற்ற குடிநீரை குடம் ரூ.10 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் பல ஆண்டுகளாக உள்ள குடிநீர் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : drought ,
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!