×

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா


வலங்கைமான், நவ.10: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் உள்ள நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் திருஞானசம்மந்தரால் பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் வருடம் தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். குருபகவான் வரும் 15ம்தேதி தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசம் செய்கிறார்.

இதனை முன்னிட்டு அன்றைய தினம் வழக்கம் போல் குருபெயர்ச்சி விழா இக்கோயிலில் நடைபெறவுள்ளது. இருப்பினும் குரு பெயர்ச்சிக்கு முன்னதாக மற்றும் குரு பெயர்ச்சிக்கு பின் என இரண்டு முறை நடைபெறும் லட்சார்ச்சனை விழா நடைபெற அனுமதி இல்லை. மேஷம்,மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம் ,மகரம், கும்பம் மற்றும் இதர ராசிக்காரர்களும் குருபகவானை தரிசிப்பது நல்லது.தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழக அரசின் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறை விதிகளின்படி ஆன்லைன் பதிவு செய்தவர்கள் மட்டுமே குருபெயர்ச்சி விழாவையொட்டி ஒரு மணிநேரத்திற்கு 200 பேர் வீதம் வரும் 14ம்தேதி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

குருபெயர்ச்சி விழா ஹோமம். அபிஷேகம். குருபெயர்ச்சி மஹா தீப ஆராதனை உள்ளிட்ட யுடியூப் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். ஆபத்சகாயேஸ்வரர் சுவாமி திருக்கோவில் ஆலங்குடி,குரு பரிகார ஸ்தலம். வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம். tnhrce.gov.in என்ற இணைய தள முகவரியில் பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம் . பக்தர்கள் அர்ச்சனை பரிகார பூஜைகளில் நேரிடையாக கலந்து கொள்ள அனுமதி இல்லை. இத்தகவலை அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் செயல்அலுவலர் தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.

Tags : Priesthood ceremony ,Alangudi Apathakayeswarar Temple ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு