×

தொற்று பரவ வாய்ப்புள்ளதால் மழைகாலம் முடிந்த பிறகு பள்ளிகளை திறக்கலாம்


நாகை, நவ.10: பள்ளிகள் திறப்பு குறித்து நாகை வருவாய் மாவட்டத்தில் உள்ள 310 பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டது. இதன் பின்னர் பள்ளிகள் திறப்பதாக அவ்வப்பொழுது திடீரென அறிவிப்புகள் வெளியிடப்படும். அதன் பின்னர் பள்ளிகள் திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்படும். இதனால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து நேற்று பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. இதன்படி நாகை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட 310 அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கருத்து கேட்கப்பட்டது.
இதில் பள்ளிகல்வித்துறை வாயிலாக அனுப்பியிருந்த கடிதத்தின் நகலை பெற்றோர்களிடம் கொடுத்தனர். அதில் பெற்றோர் பெயர் மற்றும் மாணவரின் பெயர், படிக்கும் வகுப்பு, பள்ளி, செல்எண், பள்ளிகள் திறக்கலாமா அல்லது காலம் தாழ்த்தி திறக்கலாமா, அதற்கு என்ன காரணம் ஆகியவை இடம் பெற்றிருந்தது.

பெற்றோர்கள் அந்த கடிதத்தை பெற்று அதை பூர்த்தி செய்து ஆசிரியர்களிடம் கொடுத்தனர். நாகை மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான பெற்றோர்கள் மழைகாலம் தொடங்கியுள்ளதால் தொற்று பரவ வாய்ப்புள்ளது.மேலும் பள்ளிகள் திறந்தால் மழைகாலத்தில் மீண்டும் விடுமுறை விட வேண்டும். எனவே மழைகாலம் முடித்த பின்னர் பள்ளிகளை திறப்பது பொருத்தமாக அமையும் என்று தெரிவித்திருந்தனர். பெற்றோர்களிடம் இருந்து பெறப்படும் கடிதத்தை முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும், அதன் பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கல்வி வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Schools ,season ,
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...