×

பட்டா வழங்க தாமதம் கண்டித்து கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

கரூர், நவ. 10: பட்டா வழங்க தாமதமாவதை கண்டித்து அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் அரவக்குறிச்சி தெத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன்(40). இவர், மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில் மனுக்கள் எழுதிக் கொடுக்கும் பணி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் வந்த அவர், திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குச்சி எடுத்து பற்ற வைக்க முயன்றார்.

அருகில் இருந்த போலீசார் மற்றும் பணியாளர்கள் விரைந்து சென்று தீக்குச்சியை பறித்து தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அரவக்குறிச்சி தாலுகா தெத்துப்பட்டியில் இவருக்கும் உறவினர்கள் சிலருக்கும் சொந்தமான இடம் இருப்பது தெரிய வந்தது. அந்த இடத்தில் தன் பங்குக்கு உரிய பட்டா வழங்க வலியுறுத்தி, தெத்துப்பட்டி விஏஒ அலுவலகத்துக்கு பலமுறை சென்றும் பட்டா வழங்கப்படவில்லை. அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்துக்கு சென்றும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இந்த சம்பவம் காரணமாக கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : office ,Karur Collector ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்