×

புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு


திருப்பூர், நவ.10: திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாரந்திர மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் தொலைபேசி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில், ஒரு சிலர் நேரில் கலெக்டர் அலுவலகம் சென்று அங்கிருந்த மனு அளிக்கும் பெட்டியில் மனு அளித்து சென்றனர். திருப்பூர், தெற்கு அவினாசிபாளையம் கிராம பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் ஊரில் சுமார் 200 விவசாய குடும்பங்கள் வசித்து வருகிறோம். தற்போது, திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலை அருகில் விவசாய நிலத்தின் அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த பகுதி விவசாய பெண் தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் இடமாகும். இதனால், பெண் தொழிலாளர்கள் பல்வேறு இடையூறுகளை சந்திக்க நேரிடும். ஏற்கனவே, இந்த பகுதியில் 2 கி.மீ. சுற்றளவில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆகவே, ஊர் பொதுமக்களின் நலன் கருதி புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். திருப்பூர், சோமனூர் அடுத்த தேவராயன்பாளையம் பகுதியை சேர்ந்த துரைசாமி (38) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் லட்சம் கடன் பெற்றுள்ளேன். நான் கடன் பெறும் போது ஒப்பந்தத்தில் 180 மாதங்கள் தவணை காலமாக உள்ளது. நான் மார்ச் 2020 வரை 32 தவணை சரியாக கட்டி உள்ளேன்.
கடந்த ஊரடங்கு காலத்தில் 6 மாத தவணைக்கான நிவாரணம் அறிவித்தது. இதையடுத்து, தனியார் வங்கிக்கு கடிதம் அளித்தேன். அதன்பின், 5 மாதம் சென்ற பின்பு எனது தவணை காலத்தையும், தவணை கட்ட வேண்டிய தொகையையும் அதிகரித்து விட்டனர். எனவே, இந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நான் கட்ட வேண்டிய தொகையை மட்டும் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதேபோன்று, குடிநீர் பிரச்னை, அடிப்படை வசதி, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மொத்தம் 84 அழைப்புகள் வரப்பெற்றன.

Tags : Tasmac ,store ,
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்