திருப்பூர், நவ.10: திருப்பூர் போயம்பாளையம், ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் கூடுதல் லைன் மேன்களை பணியமர்த்த கோரி இந்திய கம்யூ., கட்சியினர் நேற்று அந்த மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்திய கம்யூ., நிர்வாகி மோகன் தலைமை வகித்தார். இரண்டாம் மண்டல குழு துணை செயலாளர் விஜய், போயம்பாளையம் கிளை செயலாளர் சசிகுமார், மோட்டார் சங்க மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், ஆர்.கே.நகர் மின் வாரிய அலுவலகத்தில் லைன் மேன் பற்றாக்குறையை போக்க வேண்டும். லைன் மேன்கள் பழுது நீக்கிய பின் பணம் கேட்பதை நிறுத்த வேண்டும். போயம்பாளையம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் மின்வாரிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.