கல்வி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்துகேட்பு

பொள்ளாச்சி,நவ.10: பொள்ளாச்சி  கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, வால்பாறை,  கிணத்துக்கடவு தாலுகா ஒரு பகுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி,  தனியார் பள்ளிகளுக்கும், கடந்த மார்ச் மாதம் 25ம்தேதி கொரோனா ஊரடங்கு   துவங்கியதிலிருந்து, காலவரையின்றி மூடப்பட்டன. மேலும், அந்நேரத்தில்  இருந்து அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இரண்டு மாதத்திற்கு  முன்பு, கொரோனா ஊரடங்கு ஓரளவு தளர்வு ஏற்படுத்தப்பட்டபின், அரசு மற்றும்  தனியார் பள்ளிகளில், ஆன்லைன் வகுப்பு துவங்கப்பட்டது. இந்நிலையில், வரும்  16ம் தேதி முதல் 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கு  பாடம் நடத்தும் வகையில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்  அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கொரோனா தொற்று தாக்கம் குறையவில்லை  என்பதால், பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப  முடியாது என பலரும்  தெரிவித்து வந்த நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்  கருத்துக்கேட்பு நடத்த பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டிருந்தார்.  அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் என உயர்நிலை,  மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களிம் கருத்துக்கேட்பு நேற்று  நடைபெற்றது. அந்தந்த பள்ளிகளுக்கு வந்த, மாணவர்களின் பெற்றோர்களுக்கு  உடல் வெப்ப நிலை பரிசோதனை மற்றும் கைகளில் சானிடைசர் தடவிய பிறகே  ஒதுக்கப்பட்ட அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, சமூக இடைவெளியில்  பெற்றோர்களை அமர வைத்து, மாணவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்க மீண்டும்  பள்ளி திறக்கலாமா அல்லது எப்போது திறக்கலாம் என்பது குறித்து ஆசிரியர்கள்  கேட்டறிந்தனர். பின் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த படிவத்தில் பள்ளி  திறப்பு குறித்து வேண்டாம் அல்லது வேண்டும் என்ற பதிவில், பெற்றோர் தங்கள்  விருப்பத்திற்கேற்ப டிக் செய்தனர்.

பள்ளிகளில் கருத்துகேட்பு  நிறைவடைந்து வெளியே வந்த பெற்றோர் பலரும் கருத்து கூறுகையில், ‘தமிழகத்தில்  தற்போது கொரோனா தொற்று இன்னும் குறைந்தபாடில்லை. வெவ்வேறு நாட்களில்  தொற்று எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. தற்காலிகமாக உள்ள ஆன்லைன் வகுப்பானது  நிரந்தரம் இல்லை என தெரியும். எனவே, எங்கள் குழந்தைகள், ஆசிரியர்கள்  சொல்லிக் கொடுக்கும் பாடத்தை கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே   உள்ளது.

ஆனால், தற்போதைய சூழலில் கொரோனா தொற்று எதிர்பார்த்த படி  குறையாததால், கொரோனா தொற்று பெருமளவு குறைந்த பிறகே பள்ளிகள் திறக்கலாம்  என்பது எங்களின் கருத்து. மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தி,  பள்ளிகள் திறப்பை  தள்ளிபோடலாம். அதே நேரத்தில், படிப்பும் பாதிக்க கூடாது என்ற கவலையும் உள்ளது. கொரோனாவை  முழுமையாக கட்டுப்படுத்தும்  நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>