×

தீபாவளி நெருங்குவதையொட்டி கடை வீதிகளில் கூட்ட நெரிசல்

பொள்ளாச்சி, நவ.10: பொள்ளாச்சி  நகரில், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி,  மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பரப்பாகியுள்ளது. பொள்ளாச்சி நகரில்  உள்ள வணிக வளாகம் நிறைந்த பகுதிகளுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  துணிகள் மற்றும் நகைகள், பட்டாசுகள், எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு  உபயோக பொருட்களை வாங்குவதற்கென, நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கானோர் வந்து செல்ல  ஆரம்பித்தனர்.

இதையடுத்து,  கடைவீதி, போலீஸ் ஸ்டேஷன்ரோடு,  இமாம்கான்வீதி, சுப்பிரமணியசாமி கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள்  கூட்டத்தால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும், முக்கிய வீதிகள்  சந்திக்கும் இடங்களில் டிவைடர்கள் அமைப்பட்டதுடன், அப்பகுதியில் போலீசார்  நின்று வாகனங்களை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். வரும்  14ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதல், நகரில் உள்ள கடைகளில் துணி மற்றும்  வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை வாங்க வந்த வாடிக்கையாளர்களின்  எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.  கடைவீதிக்கு வந்தோர்களில் பலர், தங்கள்  வாகனங்களை உடுமலை ரோட்டில் ஆங்காங்கே நிறுத்தி சென்றனர்.

 அதிலும்  போலீஸ் ஸ்டேஷன் ரோடு- உடுமலைரோடு சந்திப்பு பகுதியில், இருசக்கர  வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி  சென்றதால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதையடுத்து, போலீஸ் ஸ்டேஷன் ரோடு உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் போலீசார்,  போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டதுடன், இரவு வரை  கண்காணிப்பு  பணியை தொடர்ந்தனர். நேற்று மழையில்லாததால் பல்வேறு கிராமத்தை சேர்ந்த  மக்களும் நகரில் உள்ள கடைகளுக்கு பொருட்கள் வாங்க வந்திருந்தனர்.

தீபாவளி  பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், வணிக வளாகங்கள் நிறைந்த  கடைவீதி மற்றும் வெங்கட்ரமணன்வீதி, இமாம்கான்வீதி, தேர்நிலை, போலீஸ்  ஸ்டேஷன் ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் வரும் 13ம் தேதி வரை மக்கள்  கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கூடுதல் போலீசார் மட்டுமின்றி  போக்குவரத்து போலீசார்  நியமிக்கப்பட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும்.  திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்கவும் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.

Tags : Crowds ,shop streets ,Deepavali ,
× RELATED உத்திரமேரூர் வேணுகோபாலசாமி கோயிலில்...