×

சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் ஐ.டி.பி.எல். திட்ட குழாய்களை சாலையோரமாக அமைக்க அறிவிப்பு வெளியிட வேண்டும்

மொடக்குறிச்சி, நவ. 10: மொடக்குறிச்சியில் மாநாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் ஐ.டி.பி.எல். திட்டத்துக்கு குழாய்களை சாலையோரமாக கொண்டு செல்ல அறிவிப்பு வெளியிட கோரி வலியுறுத்தப்பட்டது.
கோவை மாவட்டம் இருகூர் முதல் பெங்களூர் தேவனகொந்தி வரை 312 கி.மீ. தூரம் கொண்டு செல்ல ஐ.டி.பி.எல். திட்டத்துக்கு எண்ணெய் குழாய் எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது. இதனால் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி என 6 மாவட்ட விவசாயிகள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் நிலம் பாதிக்கப்படுகிறது. இத்திட்டத்தை சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

 இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் குழாய்களை சாலையோரமாக கொண்டு செல்ல அறிவிப்பு வெளியிடக்கோரி கோரிக்கை மாநாடு நேற்று மொடக்குறிச்சி அடுத்த ஆவரங்காடு வலசில் நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் காசியண்ணன் தலைமை தாங்கினார். ஐ.டி.பி.எல். திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் கூட்டமைப்பின் முனுசாமி வரவேற்றார். கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் பொன்னையன், வழக்கறிஞர் ஈசன், முன்னாள் எம்.எல்.ஏ. காவேரி ஆகியோர் அறிமுகவுரை ஆற்றினர்.

முன்னாள் எம்.எல்.ஏ. நல்லசிவத்தின் மனைவி சரஸ்வதி, கீழ்பவானி பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் செயலாளர் வடிவேல், சக்தி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் சென்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கோரிக்கை மாநாட்டில் முன்னாள் தி.மு.க. அமைச்சர் மு.பெ.சாமிநாதன், காங்கயம் எம்.எல்.ஏ. தனியரசு, மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பெரியசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரத்தினசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் துளசிமணி, காங்கிரஸ் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், ம.தி.மு.க. ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் குழந்தைவேல், அ.ம.மு.க. அமைப்புச் செயலாளர் சண்முகவேல், கொ.ம.தே.க. இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.  

இந்த மாநாட்டில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்துகொண்டு பேசுகையில், ‘‘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளை பார்த்து விட்டுக் கொடுங்கள் என கேட்கிறார். விவசாயிகள் எப்போதும் சுயநலவாதிகள் அல்ல. மன்மோகன் சிங் ஆட்சியில் எட்டு வழிச்சாலை, நான்கு வழிச்சாலை போடப்பட்டது அது எல்லாம் விவசாயிகளின் நிலங்கள்தான். கெயில், உயர் மின்னழுத்த கோபுரம், ஐ.டி.பி.எல். போன்ற திட்டங்களால் அரசுக்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பிரயோஜனமும் உண்டா? யாருக்கோ சம்பாதித்துக் கொடுக்க விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இழக்க முடியுமா?. ஐ.டி.பி.எல். திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தை வேகப்படுத்த வேண்டும். நாங்கள், நீங்கள் நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் உங்களோடு நின்று போராடுகிறோம்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இரண்டு தாலுகாக்களில் நிலம் கையகப்படுத்த மத்திய அரசிதழில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு தெரியாமல் வந்தது என்றால் ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள். தர்மபுரியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தை வெற்றிபெறச் செய்யவேண்டும்’’ என்றார்.  இதில் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, திருப்பூர் எம்.பி. சுப்பராயன், சேலம் எம்.பி. பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சியில் ஐ.டி.பி.எல்., கெயில், உயர் மின்னழுத்த கோபுரம் போன்ற திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags : ITPL ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு