திருச்சி மாநகர கமிஷனர் உத்தரவின் பேரில் பொதுமக்கள் மனு மீதான குறைதீர் மேளா 4 சரகத்தில் 126 மனுக்களுக்கு உடனடி தீர்வு

திருச்சி, நவ.9: திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில், இணைய வழியில், வாட்ஸ்அப் மூலம் பெறப்படும் புகார்கள் அனைத்திற்கும் உடனடி தீர்வு காணும் வகையில் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை பொதுவான இடத்திற்கு வரவழைத்து மனுக்கள் மீதான குறைகள் தீர்ப்பு மேளா நடத்த மாநகர கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் 7ம் தேதி மற்றும் நேற்று (8ம் தேதி) ஆகிய இரு தினங்கள், திருச்சி மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் மேளா நடத்தப்பட்டது.

அதன்படி 7ம் தேதி 3 இடங்களில் கன்டோன்மென்ட் காவல் சரகத்திற்கு தனியார் திருமண மகாலிலும், பொன்மலைக்கு எஸ்ஐடி வளாகத்திலும், கோட்டைக்கு தனியார் மண்டபத்திலும் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் மேளா நடத்தப்பட்டது. இதில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்ஐக்கள் ஆகியோர் கலந்துகொண்டு மனுதாரர், எதிர்மனுதாரரை நேரடியாக வரவழைத்தனர். இதில் 57 மனுதாரர்களும், 50 எதிர்மனுதாரர்களும் ஆஜராகி இருந்தனர். அதில் 59 மனுக்கள் மீது விசாரணை செய்ததில், 44 மனுக்கள் மீதான முடிவு எட்டப்பட்டு மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது.

இதேபோல் நேற்று (8ம் தேதி) 5 இடங்களில் இந்த முகாம் நடந்தது. அதன்படி கண்டோன்மெண்ட் காவல் சரகத்திற்கு திருச்சி மாநகர ஆயுதப்படை சமுதாயக்கூடத்திலும், பொன்மலை சரகத்தில் எஸ்ஐடி வளாகத்திலும், கோட்டை சரகத்தில் தனியார் மகாலிலும், ரங்கம் சரகத்தில் 2 தனியார் திருமண மண்டபங்களில் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் மேளா நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 122 மனுதாரர்களும், 109 எதிர்மனுதாரர்களும் ஆஜராகி இருந்தனர். அதில் 96 மனுக்கள் மீது விசாரணை செய்ததில், 82 மனுக்கள் மீதான முடிவு எட்டப்பட்டு மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது.

திருச்சி மாநகரில் 2 நாட்களில் மட்டும் பொதுமக்களின் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் மேளாவில் மொத்தமாக 181 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு, 126 மனுக்கள் மீது முடிவு எட்டப்பட்டு மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது. பொதுமக்களின் நலன் கருதி ஒரே நாளில் புகார் மனு மீது விசாரணை செய்யப்பட்டு முடிவுக்கு கொண்டு வருவது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இப்பணியை மேலும் சிறப்பாக செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.

மாவட்ட காவல்துறை சார்பில் 156 மனுக்களுக்கு உடனடி தீர்வு

திருச்சி மாவட்டத்தில் 6 இடங்களில் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக குறைதீர் முகாம் நேற்று நடந்தது. திருவெறும்பூர் உட்கோட்டத்தில் நடந்த குறைதீர் முகாமில் மத்திய மண்டல ஐஜி ஜெயராம், திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா மற்றும் எஸ்பி செந்தில்குமார் (பொ) கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கினர். மேலும் புகார் மனுக்களை நேரடியாக விசாரணை செய்து அவர்களின் குறைகளை தீர்த்து வைத்தனர். இதேபோல் மணப்பாறை உட்கோட்டத்தில் தலைமையக ஏடிஎஸ்பி மணிகண்டன்,

ஜீயபுரம் உட்கோட்டத்தில் நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு டிஎஸ்பி பால்சுதர், லால்குடி உட்கோட்டத்தில் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், முசிறி உட்கோட்டத்தில் டிஎஸ்பி பிரமானந்தன் ஆகியோர் தலைமையிலும் நடந்தது. இதில் பொதுமக்களிடமிருந்து 193 மனுக்கள் பெறப்பட்டு 156 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

Related Stories:

>