×

விருதுநகரில் தீபாவளிக்கு புத்தாடை, பொருட்கள் வாங்க கடைவீதியில் குவிந்த கூட்டம் சமூக இடைவெளி, மாஸ்க் மிஸ்சிங்

விருதுநகர், நவ. 9: விருதுநகரில் தீபாவளிக்கு புத்தாடை, பொருட்கள் வாங்க துணிக்கடைகள், தேசபந்து மைதான தற்காலிக கடைகளில் குவிந்த மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணியாமல் இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்று மார்ச் மாதம் துவங்கிய பரவல் வேகம் சற்று குறைந்து பரவி வருகிறது. வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என மருத்துவதுறையினர் தெரிவித்து வருகின்றனர். கடந்த 7 மாதங்களாக வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள், குழந்தைகளுடன் நவ.14ல் வரும் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் புத்தாடை, பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிய துவங்கி உள்ளனர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகமும் கடைவீதிகளில் மக்களும், கடையினரும் மாஸ்க், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதிமுறை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தீபாவளிக்கு 5 நாட்கள் இருக்கும் நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் நகர, கிராம மக்கள் குழந்தைகளுடன் விருதுநகர் மெயின் பஜார், கச்சேரி ரோடு, தேசபந்து மைதான பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் புத்தாடைகள், பொருட்கள் வாங்கினர். மாவட்ட நிர்வாகம் நகராட்சி மற்றும் காவல்துறையினர் மூலம் துணிக்கடைகள் மற்றும் நடைபாதை கடைகளில் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்கள் வாங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இதன் தாக்கம் 10 முதல் 15 நாட்களில் தெரியவரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Puttadai ,Deepavali ,Virudhunagar ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...