×

மருதாநதி அணை முழு கொள்ளளவை எட்டியும் வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு இல்லை அதிகாரிகளின் அலட்சியத்தால் தரிசாகும் விளைநிலங்கள்

பட்டிவீரன்பட்டி, நவ. 9:  பட்டிவீரன்பட்டி அருகே, மருதாநதி அணை முழு கொள்ளளவை எட்டியும், அணையின் இருபுறமும் உள்ள வடக்கு, தெற்கு கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தரிசாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே, அய்யம்பாளையம் மருதாநதி அணை உள்ளது. 72 அடி உயரமுள்ள இந்த அணையின் இடது மற்றும் வலது புறத்தில் வடக்கு, தெற்கு வாய்க்கால்கள் உள்ளன. இந்த வாய்க்கால்கள் மூலம்  சுமார் 7 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி 350 கனஅடி உபரி நீர், அணையின் பிரதான வாய்க்காலில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு, தெற்கு வாய்க்கால்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனால், பாசன வசதி பெறும் நிலங்கள் வானம் பார்த்த பூமியாகிவிட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்தில் தூர்வாரப்பட்ட இந்த வாய்க்கால்கள் தற்போது புதர் மண்டிக் கிடக்கின்றன. பிரதான வாய்க்காலில் திறந்துவிடும் உபரி நீரை வடக்கு, தெற்கு வாய்க்கால்களில் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்தும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. சுமார் 5 ஆயிரம் ஏக்கர் தென்னை, மா மரங்கள் பட்டுப்போய்விட்டன. எனவே, திறந்துவிடப்படும் உபரிநீரை வடக்கு, தெற்கு வாய்க்கால்களில் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மருதாந்தி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பிரதான கால்வாயில் திறந்துவிடப்படும் உபரிநீரை வடக்கு, தெற்கு கால்வாய்களில் திறந்துவிட வேண்டும். இல்லாவிடில் போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.

Tags : canals ,farmlands ,
× RELATED கோவை மாவட்டம் பேரூர் அருகே உலா வரும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்