×

குளித்தலை தாலுகா அலுவலக வளாகத்தில் பராமரிப்பின்றி சுகாதாரமற்ற கழிப்பிடத்தால் துர் நாற்றம்

குளித்தலை, நவ. 9: கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சார் ஆட்சியர் அலுவலகம், கிளை சிறைச்சாலை, கருவூலம், பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அறை போன்ற அனைத்து துறை அலுவலகங்களும் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பல்வேறு அலுவலக பணிக்காக தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுக்கழிப்பிடம் புதிதாக கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. கட்டிடத்தில் தற்பொழுது தண்ணீர் வசதி இல்லாமலும்,

மின் இணைப்பு இல்லாமலும் பராமரிப்பு இல்லாததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்படுகிறது. இந்த கட்டிட சுற்றுச்சுவர் வழியாகத்தான் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வோர் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்கு வருபவர்கள் மூக்கை பிடித்தவாறு சென்று வரும் நிலை ஏற்படுகிறது. இந்த வளாகத்திற்குள் தினந்தோறும் மாவட்ட அதிகாரிகள், சார் ஆட்சியர், வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கிளை சிறைச்சாலை அதிகாரிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த வளாகத்தில் உள்ள பொதுக்கழிப்பிடம் பராமரிப்பின்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மழைக்காலமாகவும் இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுக் கழிப்பிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : office premises ,Kulithalai ,
× RELATED குளித்தலை, மணப்பாறை சாலையில்...