×

இடி தாக்கியதில் சட்டசபை கட்டிடம் சேதம்: முதல்வர், சபாநாயகர் ஆய்வு

புதுச்சேரி, நவ. 9:  புதுச்சேரி சட்டசபையில் இடி மின்னல் தாக்கியதில் கட்டிடம் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட இடத்தை முதல்வர், சபாநாயகர் ஆகியோர் ஆய்வு
செய்தனர்.  புதுச்சேரி விக்டர் சிமோனல் வீதியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் சட்டசபை இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது, சட்டசபையின் பின்புறம் உள்ள இணைப்பு கட்டிடத்தின் 4வது மாடியில் இடி தாக்கியது. இதில், மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டியின் தடுப்புச் சுவர் உடைந்து நாலாப்புறம் தெறித்தது.

இந்த இடிபாடுகள் சட்டசபை கமிட்டி அறை வரை விழுந்து சிதறியது. மேலும் சட்டசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டசபை செயலகத்துக்கு சொந்தமான 3 மேற்பட்ட கார்களின் கண்ணாடி உள்ளிட்ட பாகங்கள் உடைந்து சேதமடைந்தன. இரவு நேரத்தில் இடி தாக்கியதால் ஆட்கள் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து அங்கு பணியில் இருந்த காவலர்கள் சட்டசபை செயலர் முனிசாமிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர், சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் தெரிவித்தார். இதையடுத்து நேற்று காலை இடி தாக்கி சேதமடைந்த பகுதிகளை முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து,

சட்டசபை செயலர் முனிசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சேதமடைந்த பகுதிகளை பொதுப்பணித்துறை மூலம் உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டனர். சட்டசபை கட்டிடத்தில் மின்னல் தாக்கி சேதமடைந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சபாநாயகர் சிவக்கொழுந்து கூறுகையில், இடி தாக்கியதில் சட்டசபை கட்டிடத்தின் ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை உடனே சீரமைக்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், சட்டசபை செயலகத்தின் கார்களுக்கு எந்த மாதிரியான சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்து அதையும் சரிசெய்யுமாறு கூறியுள்ளேன்.

இடி தாக்கிய இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலையில் இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது. அது தற்போது செயல்பாட்டில் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனை உடனே ஆய்வு செய்து மீண்டும் இடி தாக்காத வண்ணம் இருக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை எடுப்போம், என்றார்.

Tags : Speaker Inspection ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ