×

அரசு பள்ளி மைதானத்தில் விளையாட தடை: தலைமை ஆசிரியரை கண்டித்து மாணவர்கள் திடீர் சாலை மறியல்

உளுந்தூர்பேட்டை, நவ. 9: உளுந்தூர்பேட்டை அரசு பள்ளி மைதானத்தில் விடுமுறை நாளில் விளையாடிய மாணவர்களை தலைமை ஆசிரியர் வெளியேற்றியதால் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுமுறை நாளான நேற்று காலை மைதானத்தில் மாணவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தலைமையாசிரியர் ராமச்சந்திரன் மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் அரசுப்பள்ளி எதிரில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விடுமுறை தினத்தில் பள்ளி மைதானத்தில் விளையாடியதை தலைமை ஆசிரியர் தடுத்து வெளியேற்றியதால் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இச்சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : headmaster ,
× RELATED ஓமலூர் அருகே தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு..!!