×

கடை வீதியில் ஜவுளி வாங்க குவிந்த மக்கள்

ஈரோடு,நவ.9: ஈரோட்டில் ஜவுளி வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றப்பட்டது. தீபாவளி பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பொதுமக்கள் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இதனால், இம்மாதத்தின் துவக்கத்தில் இருந்தே கடை வீதிகளில் ஜவுளி, பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதாலும் ஜவுளிகளை வாங்க பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்தனர். இதனால், நேற்று மதியம் முதல் மாலை வரை கடை வீதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

இதில், ஈரோடு ஆர்.கே.வி.ரோடு, நேதாஜி ரோடு, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, கனிமார்க்கெட், திருவேங்கடசாமி வீதி, பிரப்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. மேலும், சாலையோரமாக குறைந்த விலையில் சட்டை, சேலை, குழந்தைகளுக்கான துணிகள் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டது. இதனால், கடை வீதிகளில் பகல் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து மாற்றம்: ஈரோடு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், மணிக்கூண்டு ரோடு, ஆர்.கே.வி ரோட்டில் போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்தனர். இதன் காரணமாக பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பில் இருந்து மணிக்கூண்டு செல்லும் சாலையும், காவிரி ரோட்டில் இருந்து ஆர்.கே.வி.ரோட்டுக்கு செல்லும் சாலையும் தற்காலிகமாக மூடப்பட்டு, அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்று வழியாக திருப்பி அனுப்பப்பட்டது. அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஈரோடு கடை வீதிகளில் மக்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும், திருட்டு, கொள்ளை சம்பவங்களை கண்காணிக்கவும் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாட்ச் டவர் அமைத்து தீவிரமாக கண்காணித்தனர்.

Tags : shop street ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி